மேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின். 
தமிழகம்

கெஞ்சிக் கேட்கிறேன்; வெளியில் நடமாடுவதை குறைத்துக்கொள்ளுங்கள்: முதல்வர் ஸ்டாலின்

செய்திப்பிரிவு

வெளியில் நடமாடுவதை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என தான் கெஞ்சி கேட்பதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, உரிய காலமான ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படும் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, மேட்டூர் அணை வளாகத்தில் இன்று (ஜூன் 12) காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், காவிரி டெல்டா பாசனத்துக்கான நீரை மேட்டூர் அணையில் இருந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதன்பிறகு, முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"தமிழகத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. நான் ஆட்சி பொறுப்பேற்கும்போது, தினசரி தொற்று பாதிப்பு 36 ஆயிரமாக இருந்தது. உரிய நடவடிக்கை எடுத்து, முழு ஊரடங்கைக் கொண்டு வந்தோம்.

தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 16 ஆயிரத்துக்கும் கீழே வந்துள்ளது. சென்னையில் 7,000 ஆக இருந்த தொற்று பாதிப்பு, தற்போது 1,000 ஆகவும், கோவையில் 5,000 ஆக இருந்தது, தற்போது 2 ஆயிரத்துக்குக் கீழேயும், சேலத்தில் 1,500-ல் இருந்து 900 ஆகவும் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.

மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தது. இப்போது, தட்டுப்பாடு என்ற சூழல் இல்லை.

சென்னையில் 'வார் ரூம்' திறக்கப்பட்டபோது, மே 20-ம் தேதி 4,768 அழைப்புகள் வந்தன. இப்போது, 200 முதல் 300 அழைப்புகளே வருகின்றன. தடுப்பூசியை அதிகமாக வழங்கிட, மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறோம்.

மக்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளோம். இதனை மக்கள் அலட்சியமாக பயன்படுத்தக் கூடாது. அவசியமின்றி மக்கள் வெளியில் நடமாடக் கூடாது. வெளியில் நடமாடுவதை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். மக்களிடம் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்.

ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT