புதுச்சேரியில் புதிதாக 442 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (ஜூன் 12) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 9,030 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 321, காரைக்கால் - 97, ஏனாம் - 10, மாஹே - 14 என மொத்தம் 442 (4.89 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 7 பேர், காரைக்காலில் 2 என 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 8 பேர் ஆண்கள், ஒருவர் பெண்கள் ஆவர். ஏனாம், மாஹேவில் உயிரிழப்பு ஏதுமில்லை.
முத்தியால்பேட்டையை சேர்ந்த 43 வயது ஆண், வாணரப்பேட்டையை சேர்ந்த 35 வயது ஆண், நெல்லித்தோப்பை சேர்ந்த 64 வயது முதியவர், காமராஜர் வீதியை சேர்ந்த 51 வயது ஆண், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த 70 வயது முதியவர், மதகடிப்பட்டை சேர்ந்த 62 வயது முதியவர் ஆகிய 6 பேரும் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியிலும்,
ஜீவானந்தபுரத்தை சேர்ந்த 68 வயது முதியவர் ஜிப்மரிலும், காரைக்கால் மாவட்டத்தில் எம்எம்ஜி நகரை சேர்ந்த 77 வயது முதியவர், மீரா பள்ளி வாசல் தோட்டத்தை சேர்ந்த 88 மூதாட்டி ஆகிய இருவரும் காரைக்கால் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,677 ஆகவும், இறப்பு விகிதம் 1.50 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 12 ஆயிரத்து 126 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 884 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 4,861 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 5,745 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 844 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 704 (93.38 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 11 லட்சத்து 55 ஆயிரத்து 765 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 218 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 3 லட்சத்து 14 ஆயிரத்து 831 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.