சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' மற்றும் ‘ஒன்றிணைவோம் வா' ஆகிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தண்ணீர் திறந்து வைப்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சேலம் வந்தார். சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி, ஆத்தூர் உள்ளிட்ட தொகுதிகளைச் சேர்ந்த 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியின்போது, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், கரோனா பேரிடர் நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், எம்பி.க்கள் சேலம் பார்த்திபன், கள்ளக்குறிச்சி கவுதம சிகாமணி, நாமக்கல் சின்ராஜ், தருமபுரி செந்தில், சேலம் வடக்குத் தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தின் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த 10.49 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும், திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். திமுக சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திமுக சார்ந்த எவ்வித அடையாளங்களும் இல்லாமல், மஞ்சள் நிற பையில் பயனாளிகளுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.