போரூர் ஏரிக்குள் போடப்பட்ட கரையை பொதுப்பணித்துறையினர் அகற்ற வேண் டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. தீர்ப்பாயத்தின் உத்தரவை ஏற்று ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசை மதுரவாயல் எம்எல்ஏ பீம்ராவ் வலியுறுத்தியுள்ளார்.
போரூர் ஏரியின் ஒரு பகுதி தனியார் மருத்துவமனைக்கு சொந்தமானது. அதனை பிரிக்க ஏதுவாக ஏரியின் மையப் பகுதியில் பொதுப்பணித்துறை யினர் கரை அமைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தன.
இந்நிலையில், போரூர் ஏரியில் அமைக்கப்பட்ட கரை தொடர்பாக நன்மங்கலத்தை சேர்ந்த மேகநாதன், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த தேசிய தீர்ப்பாயம் நேற்று முன்தினம் இறுதி உத்தரவு பிறப்பித்தது.
அதில், நீர்நிலை பகுதியில் கட்டு மானப் பணி மேற்கொள்ளக் கூடாது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையில் போரூர் ஏரியின் உட்பகுதியில் போடப்பட்டுள்ள கரையை பொதுப் பணித்துறை அகற்ற வேண்டும். ஏரிக்குள் கட்டுமானப் பணி மேற்கொள்ளக் கூடாது. ஏரியில் உள்ள நீர் பொதுமக்கள் பயன் பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தனியார் அதனை எடுக்கக்கூடாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தேசிய தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை வரவேற்று போரூர் ஏரி பாதுகாப்பு மக்கள் குழு சார்பில் ஏரிக்கரையில் நேற்று இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற மதுரவாயல் எம்எல்ஏ பீம்ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
1912 வரை போரூர் ஏரியின் பரப்பளவு 823 ஏக்கராக இருந்தது. 82 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்கக் கூடிய இந்த ஏரி, படிபடியாக சுருக்கப்பட்டு, தற்போது 46 மில்லியன் கனஅடி நீரை மட்டுமே தேக்கி வைக்கக் கூடியதாக மாறியுள்ளது. தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவை வரவேற்கிறோம்.
இந்த உத்தரவை ஏற்று, போரூர் ஏரியை தமிழக அரசு முழுமையாக பாதுகாக்க வேண்டும். 1912-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலைக்கு போரூர் ஏரியை கொண்டு வர வேண்டும்.
போரூர் ஏரியில் இனி ஆக்கிரமிப்பு நடக்காமல் இருக்க ஏரியை சுற்றி வேலி அமைக்க வேண்டும். ஏரியில் கழிவு நீர் கலக்காமல் இருக்கவும் உபரி நீர், அடையாறு அல்லது கூவத்தில் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றார்.