குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதை கண்டறிந்தால், 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும் என்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றும் வகையில் மாநில அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி தொழிலாளர் துறையின் சார்பில் நேற்று நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்று குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகங்கள் கொண்ட ராட்சத பலூனை பறக்கவிட்டார். குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவது குறித்த உறுதிமொழியை ஏற்றார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கணேசன் பேசியதாவது:
தமிழகத்தை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள், உரிமையாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம், அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அவை இரண்டும் நீதிமன்றத்தால் தண்டனையாக விதிக்கப்படும். கடந்த ஆண்டில் 26,990 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 156 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டால் அதுகுறித்து புகாரளிக்க, மாநில அளவில் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குழந்தை தொழிலாளர் பணிபுரிவதை கண்டறிந்தால் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சிப் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு சீருடைகள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். கடந்த 2020-21-ம் கல்வியாண்டில் 474 மாணவர்களுக்கு ரூ.28.44 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.