தமிழகம்

போலீஸாரை தரக்குறைவாக பேசிய விவகாரம்; பெண் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு காவல்துறை கடிதம்

செய்திப்பிரிவு

போக்குவரத்து போலீஸாரை தரக்குறைவாக பேசி, மிரட்டல் விடுத்த பெண் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பார் கவுன்சிலுக்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

சென்னை, சேத்துப்பட்டு சிக்னலில் அண்மையில் போக்குவரத்து தலைமைக் காவலர்கள் 3 பேர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை மறித்து விசாரணை செய்தனர். அப்போது, ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றியதாக சட்டக் கல்லூரி மாணவி ப்ரீத்தி ராஜனுக்கு அபராதம் விதித்தனர். இதனால், கோபமடைந்த அவரது தாயாரான வழக்கறிஞர் தனுஜா ராஜன் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

போலீஸாரை தரக்குறைவாகவும், மிரட்டும் வகையிலும் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி இருவருக்கும் போலீஸார் சம்மன் அனுப்பினர். இதற்கிடையில் இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். ஆனால் அவர்களின் முன்ஜாமீன் மனுக்கள் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், சென்னை காவல்துறை சார்பில் பார் கவுன்சிலுக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், வழக்கறிஞர் தனுஜா மற்றும் அவரது மகளான பயிற்சி வழக்கறிஞர் ப்ரீத்தி ஆகிய இருவரின் விபரங்களையும் குறிப்பிட்டு, இதுபோன்ற செயல்களில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது. காவலர்கள் தங்கள் கடமையை செய்வதற்கு வழக்கறிஞர்கள் உதவியாக இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு இடையூறு செய்வதாக இருக்க கூடாது.

எனவே, வழக்கறிஞர் தனுஜா மீது பார் கவுன்சில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT