சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்திரி மேல்நிலைப் பள்ளியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி வருகின்றனர்.
மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகத்துக்குச் சம்மன் அனுப்பிவிசாரித்து வருகிறது. அதன்படி, ஆஜராகும் பள்ளி நிர்வாகிகளிடம் ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, உறுப்பினர்கள் ராம் ராஜ், துரைராஜ், சரண்யா ஜெயக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் சிலர் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். மேலும், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் சிலர் புகார் அளித்ததாகவும் தெரிகிறது.
இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்கப் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி தாளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் 11-ம் தேதி (நேற்று) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் சம்மன் அனுப்பிருந்தது.
இந்நிலையில், பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், நிறுவனர் சார்பில் விளக்கமளிக்க வழக்கறிஞர் நாகராஜன் உள்ளிடோர் ஆணையத்தில் நேற்று ஆஜராகினர். மேலும், சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சைபெறுவதால் நேரில் ஆஜராக முடியவில்லை என்று விளக்கமளித்தனர்.
மேலும், குற்றச்சாட்டு குறித்துஅவர்கள் அளித்த விளக்கங்களைஆணைய அதிகாரிகள் வாக்குமூலமாகப் பதிவு செய்தனர். பின்னர்சிவசங்கர் பாபா நேரில் விளக்கமளிக்க வேண்டும் என்று ஆணைய அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளனர்.