ஆலோசகர்கள் தங்குவதற்கு, அரசு இல்லம் சீரமைப்புக்குப் பெருமளவு தொகை செலவு செய்யப்பட்டுள்ளது தொடர்பான ஆர்டிஐ தகவலையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விசாரித்து அறிக்கை தர தலைமைச் செயலருக்குப் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை இன்று உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி மாற்றப்பட்டு கடந்த பிப்ரவரி 18-ம் தேதி புதிய துணைநிலை ஆளுநராக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பை ஏற்றார். இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. அதையடுத்து ஆளுநரின் ஆலோசகர்களாக பிப்ரவரி 26-ம் தேதி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சந்திரமவுலி, மகேஸ்வரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அதையடுத்து சட்டப்பேரவையில் முதல்வரின் செயலர் இருந்த அறை அருகிலுள்ள மற்றொரு அறை ஆகியவை ஆளுநரின் இரு ஆலோசகர்களுக்கு மார்ச் 1-ம் தேதி ஒதுக்கப்பட்டது.
மிகச்சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஏற்கெனவே 20க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ள சூழலில் ஆளுநர் மாளிகையில் ஆளுநருக்குத் தனி அரசு செயலர் மற்றும் ஏராளமான அரசு அலுவலர்கள் இருக்கும் சூழலில் ஆளுநரின் ஆலோசகர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்து, முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றவுடன் ஆளுநரின் ஆலோசகர்கள் பதவிக் காலம் முடிவடைந்தது. சுமார் இரு மாதங்கள் மட்டுமே அவர்கள் பணியில் இருந்தனர். அத்துடன் சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த ஆலோசகர்களின் அறைகள் காலி செய்யப்பட்டன.
ஏற்கெனவே அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்குப் பல மாதங்களாக ஊதியம் போடாத நிலையில் இரு மாதங்கள் மட்டுமே பணியில் இருந்த ஆளுநரின் ஆலோசகர்களுக்கு ஊதியம், உதவியாளர், வாகனங்கள், இல்லம் என அரசு நிதி செலவிடப்பட்டது.
இதுபற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெற்ற ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்புத் தலைவர் ரகுபதி கூறியதாவது:
"ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் மாத ஊதியமாக மொத்தம் ரூ. 2.8 லட்சமும், இவர்களுக்கு உதவியாளர்களாக வேறு அரசுத் துறையில் இருந்த நான்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் ஆளுநரின் ஆலோசகர் தங்க அரசு இல்லம் ரூ.14.65 லட்சத்தில் செலவு செய்து சரிசெய்து தரப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த இல்லத்தைக் கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.12 லட்சம் செலவில் சீரமைத்திருந்தனர். தற்போது ரூ.5 லட்சம் செலவிட்டுச் சீரமைத்துள்ளதுடன் வீட்டு உபயோகப் பொருட்களாக கட்டில், மெத்தை, சோபா, சேர் என ரூ.9.65 லட்சத்துக்கு வாங்கி அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. பொறுப்பு ஆளுநரின் ஆலோசகர்களுக்கு இரண்டு மாதத்தில் ஊதியம், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கி செலவு உள்பட அனைத்துக்கும் ரூ.24.05 லட்சம் செலவிடப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.
தலைமைச் செயலர் விசாரித்து அறிக்கை தர ஆளுநர் உத்தரவு
இதையடுத்து தெலங்கானாவில் தற்போதுள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று தலைமைச் செயலர் அஸ்வனி குமாருக்குப் பிறப்பித்துள்ள உத்தரவில், "ஆலோசகர்கள் தங்க அரசு இல்லத்துக்குப் பெருமளவு தொகை செலவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும். முழு விவரங்களை அறிக்கையாகத் தர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.