மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. இது விரைவில் அமைந்தால் தென்மாவட்ட மக்களின் மருத்துவத்திற்கும், பொருளாதார உயர்வுக்கும் வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2015ம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
இடம் தேர்வு போராட்டத்திற்கு போராட்டத்திற்குப் பின் 2018ம் ஆண்டு மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2019 ஜனவரி 27ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு நேரடியாக வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டும்போது 45 மாதங்களில் முடிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், கூறியப்படி பணிகள் தொடங்கப்படவில்லை.
ஜப்பானிடம் கடன் பெறுவதற்கு மத்திய அரசு 2021ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி அந்நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டது. ஆனால், நிதி ஒதுக்கப்படாததால் தமிழகத்தில் ஆட்சி மாறியும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை காட்சிகள் மட்டும் மாறவில்லை.
அதனால், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் மதுரை எய்ம்ஸ் மருத்துமனை கட்டுமானப்பணியை தொடங்க குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, என்பவர் தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் சம்பந்தமாக பல்வேறு தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அதன் தற்போதைய நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
கடந்த ஜூன் 5ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தற்காலிக கட்டிடத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டே தொடங்க வேண்டும் என்றும், மேலும் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார் .
இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பதியில் மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் அனுமந்த ராவ் கூறும்போது, இந்த ஆண்டு இறுதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்படும் என்றும் கட்டுமானப் பணிகள் இரு மாதங்களில் தொடங்கப்படும் என்று கூறினார். அதனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சாதக அம்சங்கள் மீண்டும் துளிர்விட ஆரம்பித்துள்ளன.
தற்போது தற்காலிக கட்டிடத்திற்காக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அல்லது மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடங்குவதற்கு ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1264 கோடிக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கியிருந்தது. தற்போது திட்ட மதிப்பீடு 2000 கோடி வரை உயரும் வாய்ப்பு உள்ளது மற்றும் இந்த திட்ட மதிப்பீடு உயர்வு அரசில் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பல்வேறு தகவல்களை பெற்ற பாண்டிய ராஜா கூறுகையில், "இந்த ஆண்டு இறுதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கை மதுரை எய்ம்ஸில் தொடங்கப்படும் என்றும், அதேபோல் கட்டுமானப்பணிகள் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தொடங்கப்படும் என்றும் கூறியிருப்பது தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
தென் மாவட்டங்களை சார்ந்த ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மட்டுமே நம்பியிருந்தனர். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையும் வருவதால் அவர்களுக்கு இனி உலக தரத்தில் சிகிச்சை கிடைக்கும். அதுமட்டுமில்லாது தென் மாவட்ட மக்களுடைய வேலைவாய்ப்புக்கும் பொருளாதார உயர்வுக்கும் வழி வகுக்கும்.
தற்காலிக கட்டிடத்தை மதுரை அரசு மருத்துவமனையிலோ அல்லது தனியார் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மதுரையிலே எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கையை தொடங்க மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மதுரை எய்ம்ஸ் கடந்து வந்த பாதை
மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை 2015ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி அறிவிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி மதுரை இடம் தேர்வு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து அதே ஆண்டு டிசம்பர் 17ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி சுற்றுச்சுவர் கட்டுமான பணி தொடக்கப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலம், மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு 2020ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி ஒப்படைக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிர்வாக இயக்குனர் நியமிக்கப்பட்டார். ஜப்பான் நாட்டிடம் நிதி பெற மார்ச் 26ம் தேதி கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.