தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நடந்த முறைகேடுகள் குறித்தும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவுத் துறையில் பல குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றை சரிசெய்து வெளிப்படைத் தன்மையான நிர்வாகமாக கூட்டுறவுத்துறை செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள 4,451 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளி்ல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதில் உள்ள குளறுபடிகள் நீக்கப்படும். தவறுகள் நடைபெற்று இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கணினிக்கும் ஆன்லைனுக்கும் வித்தியாசம் தெரியாதவராக முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ
உள்ளார். மத்திய கூட்டுறவு வங்கியுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆன்லைன் மூலம் இணைக்கப்படவில்லை. இவ்வாறு இருக்கும்போது கடந்த ஆட்சியில் தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கிய விபரம் குறித்து ஆன்லைனில் எவ்வாறு பார்க்கமுடியும்.
துறையில் என்ன நடந்துள்ளது என்பது தெரியாமல் கடந்த பத்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்துள்ளார். ஆட்சியின் இறுதியில் அறிவிக்கப்பட்ட நகை கடன் தள்ளுபடியில் பல முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. பல தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணமே இல்லாத நிலையில் எப்படி கடன் வழங்க முடியும். பல தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகையை அடமானம் வைத்து பணம் வழங்கியதாகவும், அதனை தள்ளுபடி செய்தாகவும் முறைகேடுகள் நடந்துள்ளது என குற்றச்சாட்டப்பட்டுவருகிறது.
இதுகுறித்து மாநிலம் முழுவதும் தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி வாரியாக ஆய்வு நடத்தப்படும். ஆய்வின் முடிவில் விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடான முறையில் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்க தலைவர்கள் பதவிகளின் நிலை குறித்து சட்டசபை கூட்டத் தொடருக்கு பின்பு தமிழக முதல்வருடன் கலந்தாலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் சிறந்த துறையாக மாற்றுவதற்க்காக இந்த துறையை தமிழக முதல்வர் என்னிடம் தந்துள்ளார். கூட்டுறவுத்துறையை வெளிப்படைத்தன்மை நிர்வாகத்துடன் சிறந்த துறையாக மாற்றுவேன்.
கடந்த 10 ஆண்டுகளாக கூட்டுறவு வங்கிகளில் புதிய உறுப்பினர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. விவசாயிகள் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவர், என்றார்.