மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை தற்காலிக கட்டிடத்தில் ஆரம்பித்து வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தொடங்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு விரைவில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு 2018-ல் அறிவித்தது. 2019-ல் பிரமர் மோடி நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். இருப்பினும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை.
மதுரையுடன் அறிவிக்கப்பட்ட 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்காளம், தெலுங்கானா மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெறுவதுடன், இந்த மாநிலங்களில் வெளிப்புற நோயாளிகள் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், அசாம், குஜராத், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாநிலங்களில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையும் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவும், எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையும் தொடங்கவில்லை. எனவே, மதுரையில் தற்காலிக இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி, வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை தொடங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய 3 வார அவகாசம் கேட்கப்பட்டது. அதையேற்க மறுத்த நீதிபதிகள், மத்திய அரசு விரைவில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 30-க்கு ஒத்திவைத்தனர்.