அவதூறு செய்திகளை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, விழுப்புரம் எஸ்.பி-யிடம் பாமக எம்எல்ஏ புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் எம்எல்ஏ-வாக பதவி வகிப்பவர் சிவக்குமார் (பாமக). இவர் இன்று (ஜூன் 11) விழுப்புரம் எஸ்.பி. ஸ்ரீநாதாவிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
"நான் மயிலம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றி வருகிறேன். கூட்டணிக் கட்சியான அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மருத்துவ சிகிச்சையில் இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை.
தற்போது அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றதை, சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி தவறாக விமர்சனம் செய்து அவதூறு பரப்பி வருகின்றனர். மேலும், கடந்த 9-ம் தேதியும், 11-ம் தேதியும் சில நாளிதழ்களில் அவதூறு செய்தி வெளியிட்டுள்ளனர்.
எனக்கும், நான் சார்ந்த பாமக-வுக்கும் மிகுந்த அவப்பெயரையும், அவதூறையும் ஏற்படுத்திவரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாக அம்மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், செய்தித்தாள்களில் வெளியிட்டதை நான் முற்றிலும் மறுக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.