காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 
தமிழகம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஜெ.ஞானசேகர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, திருச்சியில் இன்று பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வைக் கண்டித்து, நாடு முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன் ஜூன் 11-ம் தேதி போராட்டம் நடத்த வேண்டும் என்று கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்திருந்தார்.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களவை திருச்சி தொகுதி உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தலைமையில், திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் எதிரே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்டத் தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் சுஜாதா, சரவணன், ரெக்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை என்று கூறி, மத்திய அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, "கரோனா பரவலால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து மக்கள் மேலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இதேபோல், புள்ளம்பாடியில் திருமழபாடி சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன் கட்சியின் புள்ளம்பாடி வட்டார தலைவர் அர்ச்சுணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேசிய பொதுக் குழு உறுப்பினர் என்.ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT