ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப் பணிகளுக்கான குடிமைப் பணி (சிவில் சர்வீசஸ்) தேர்வுகளில் கடந்த ஆண்டு முதன்மைத் தேர்வில் தேர்வு பெற்ற 2,046 பேருக்கான ஆளுமைத் தேர்வு (நேர்முகத் தேர்வு) தேதியை யூபிஎஸ்சி அறிவித்துள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப்பணிகளுக்கான குடிமைப் பணி (சிவில் சர்வீசஸ்) தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தத் தேர்வுகளில் முதல்நிலைத் தேர்வுகளை இந்தியா முழுவதும் 10 லட்சம் பேர் வரை எழுதுவார்கள்.
இதில் முதல்நிலைத் தேர்வு (prelims), முதன்மைத் தேர்வு (mains), ஆளுமைத் தேர்வு (personality test) (நேர்முகத் தேர்வு) என்ற அடிப்படையில் ஆட்சிப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். ஐபிஎஸ் படிப்பவர்கள் காவல்துறைக்கும், ஐஏஎஸ் படிப்பவர்கள் நிர்வாகப் பணிக்கும், ஐஎஃப்எஸ் படிப்பவர்கள் வெளியுறவுத் துறைக்கும், ஐஆர்எஸ் படிப்பவர்கள் வருமான வரித்துறைக்கும் தேர்வு செய்யப்படுவர்.
இதுதவிர 23-க்கும் மேற்பட்ட ஆட்சிப் பணி படிப்புகளுக்கும் இது ஒன்றே தேர்வு. ஏதாவது ஒரு பட்டப்படிப்பும், பயிற்சியும் இருக்கும் யாரும் தகுந்த வயது இருக்கும் பட்சத்தில் தேர்வு எழுதலாம். 10 லட்சம் பேர் வரை எழுதும் இந்தத் தேர்வுகளில் இறுதியாக வருடத்திற்கு சுமார் ஆயிரம் பேர் தேர்வாகிறார்கள்.
2020-ம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வுகள் கடந்த மே 31ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கரோனா தொற்று காரணமாக மார்ச் 24 முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 2020-க்கான சிவில் சர்வீஸ் முதல் நிலைத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக 2020 அக்டோபர் 4ஆம் தேதி நடந்தது.
இதில் தேர்ச்சி அடைந்தவர்கள் 2021 ஜனவரி மாதம் 8ஆம் தேதி ஆரம்பித்து 9,10,16,17 எனத் தொடர்ந்து 5 நாட்கள் முதன்மைத் தேர்வு எழுதினர். இவர்களில் தேர்ச்சி அடைந்தவர்கள் 2,046 பேரின் ரோல் நம்பரை யூபிஎஸ்சி வெளியிட்டது. இவர்களுக்கான ஆளுமைத் தேர்வுக்கு (நேர்முகத் தேர்வு) ஏப்ரல் 26ஆம் தேதி அழைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மீண்டும் இரண்டாம் அலை பரவல் அதிகரித்ததால் 26/04/2021 நடக்கவிருந்த ஆளுமைத் தேர்வும் (நேர்முகத் தேர்வு) தள்ளிப்போனது.
இந்நிலையில் நேற்று யூபிஎஸ்சி 2020ஆம் ஆண்டு ஆளுமைத் தேர்வு (நேர்முகத் தேர்வு) தேதியை அறிவித்தது. இதன்படி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆளுமைத் தேர்வு (நேர்முகத் தேர்வு) தொடங்குகிறது. தினசரி சராசரி 60 பேர் மட்டுமே ஆளுமைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
தொடர்ந்து செப்டம்பர் 22ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இதுகுறித்த விவரங்களை https://www.upsc.gov.in & https://www.upsconline.in என்ற இணையதளத்தில் காணலாம். ரோல் நம்பருக்கு கொடுக்கப்பட்டுள்ள தேதியில் மட்டுமே ஆளுமைத் தேர்வில் கலந்துகொள்ள முடியும். தேதிகளை மாற்றக் கோர முடியாது என்பதால் குறித்த தேதியில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதிலிருந்து 2020ஆம் ஆண்டுக்கான 890 பேரைத் தேர்வு செய்ய உள்ளனர். இதேபோல் 2021ஆம் ஆண்டுக்கான சிவில் தேர்வில் 712 சிவில் அதிகாரிகளைத் தேர்வு செய்ய சிவில் தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் அக்.10 அன்று நடக்க உள்ளது.
2021-க்கான சிவில் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான முதன்மைத் தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.