தமிழகம்

வெள்ள பாதிப்புக்கும் இழப்புகளுக்கும் அதிமுக அரசு பொறுப்பேற்க வலியுறுத்தியே ஆர்ப்பாட்டம்: திமுக தலைவர் கருணாநிதி விளக்கம்

செய்திப்பிரிவு

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

திமுகவை பொறுத்தவரை 2016-ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டத்துடன்தான் தொடங்குகிறது. 100 ஆண்டு களில் சென்னை சந்தித்திராத மழை என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மழை வெள்ளத் தால் எத்தனை பேர் இறந்தனர், எவ்வளவு இழப்பு என்பதற் கான பட்டியல் அரசால் தரப்பட்டதா? முதல்வர் எத்தனை முறை பத்திரிகையாளர்களை சந்தித்தார்? ஒரே ஒருமுறை ‘வாட்ஸ் அப்’பில்.. அதுவும் உண்மையில் முதல்வர் பேசியது தானா? தொகுதி மக்களைப் பார்த்து ஆறுதல் கூறப்போனவர், ‘வாக்காள பெருமக்களே’ என்று அழைத்தார். இதுபற்றி பத்திரிகை கள் எழுதியபோதும் விளக்கம் தரவில்லை.

குழந்தைகளுக்கு பால், ரொட்டி கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டபோது, அவர்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், இளைஞர்களும் தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் உழைத்தனர். ஆனால், தேர்தல் நேரத்தில் செய்வீர்களா? என கேட்டு வாக்குகளைப் பெற்ற ஜெயலலிதா, நேரில் வந்து ஆறுதல் கூறவில்லை. அதிமுகவினரோ தொண்டு நிறுவனங்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களில்கூட ஸ்டிக்கர் ஒட்டுவதில்தான் அக்கறை காட்டினர்.

இவ்வளவு துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் இயற்கை மட்டுமா காரணம்? செம்பரம்பாக்கம் ஏரியை உரிய நேரத்தில் திறக்க அனுமதித்திருந்தால், டிசம்பர் 1-ம் தேதி ஒரே நேரத்தில் ஏராளமான நீரை திறந்து சென்னையை மூழ்கடிக்கும் சிரமம் நேர்ந்திருக்காது. சென்னை மக்கள் அவதிப்படும் நேரத்தில், முதல்வர் தலைமைச் செயலகத்தில் பணக்காரர்கள், தொழிலதிபர்களிடம் நிவாரண நிதியை வாங்குகிறார். காணொலி காட்சி மூலம் எதையாவது திறந்துவைக்கிறார்.

அதே நேரத்தில் இந்த ஆட்சியின் உண்மை உருவத்தைப் பற்றி பல வார இதழ்கள் விரிவாக எழுதி வருகின்றன. இதற்கு அரசின் சார்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. வெள்ளத்துக்கு காரணம் யார் என்பதை மக்களிடையே தெளிவுபடுத்த, திமுக நீதி விசாரணை கோரியது. அதற்கும் எவ்வித விளக்கமும் தரப்படாததால் தமிழக வெள்ள பாதிப்புகளுக்கும் இழப்புகளுக்கும் அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே ஜனவரி 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT