தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று பாதிப்பில் கோவை முதலிடத்தில் உள்ள நிலையில், கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த பெ.குமாரவேல் பாண்டியன் நேற்று முன்தினம் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை மாநகராட்சி தெற்கு மண்டல துணை ஆணையராக இருந்தஇளம் ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் சுங்கரா கோவை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுஉள்ளார். 30 வயதாகும் ராஜகோபால் சுங்கரா, கோவை மாநகராட்சிக்கு நியமிக்கப்பட்ட ஆணையர்களில் இளம் வயதுடையவர்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த ராஜகோபால் சுங்கரா, 1990 ஏப்.11-ல் பிறந்தவர். ஐஐடி காரக்பூரில் வேளாண், உணவு பொறியியல் பிரிவில் பி.டெக். மற்றும் எம்.டெக். (டூயல் டிகிரி முறையில்) படித்து முடித்தவர். பிறகு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொது நிர்வாகம் படித்துள்ளார். 2014-2015-ல் ஐஏஎஸ் தேர்வில் 49-வது ரேங்க் பெற்றார்.
2015 செப்டம்பரில் தமிழக பிரிவில் ஐஏஎஸ் பணியில் பயிற்சி அதிகாரியாக இணைந்தார். 2016 ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி ஆட்சியராக (பயிற்சி) பணி செய்தார். முசிறியில் 2 மாதங்கள் பயிற்சி அதிகாரியாக இருந்தார். 2017 ஜூலையில் கால்நடைத் துறையில் உதவிச் செயலராக நியமிக்கப்பட்டார்.
2017 அக்டோபரில் குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சார் ஆட்சியராக இருந்தபோது ஏற்பட்ட ‘ஒக்கி’ புயல் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். 2018-ல் குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பெருஞ்சாணி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வெள்ளத்தால் சூழப்பட்ட பளுகல், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சிக்கிய பொதுமக்களை சார் ஆட்சியராக இருந்த ராஜகோபால் சுங்கரா, கொட்டும் மழையில் இடுப்பளவு நீரில் சென்று பாதுகாப்பாக வெளியேற உதவினார். இது அனைவரது பாராட்டையும் பெற்றது.
2019 ஜனவரியில் தஞ்சாவூரில் கஜா புயல் நிவாரணப் பணியில் கூடுதல் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார். பிறகு கடலூரில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரியாகவும், 2021 பிப்ரவரியில் தொழில் துறை துணைச் செயலராகவும், பிறகு கடந்த மே மாதம் சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். பேரிடர் மீட்புப் பணிகளில் அனுபவம் வாய்ந்த அதிகாரியான ராஜகோபால் சுங்கரா, கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபடுவதற்காக கோவை மாநக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐஏஎஸ் தேர்வுக்கு ஆலோசனை
இவரிடம் பலரும் ஐஏஎஸ் படிப்பு குறித்து இணையவழியில் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
இதுகுறித்து ராஜகோபால் சுங்கராவிடம் கேட்டபோது, “வரும் 14-ம் தேதி கோவையில் பணியில் இணையவுள்ளேன். கோவை மாநகரில் தற்போது கரோனா தொற்று தீவிரமாக உள்ளது. சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்று தடுப்பு பணிகளில் சிறிது காலம் பணி செய்துள்ளேன். தவிர, ஏற்கெனவே பணி செய்த மாவட்டங்களில் பல்வேறு பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். இத்தகைய அனுபவங்கள் எனக்கு கை கொடுக்கும் என நம்புகிறேன்.
கோவையில் பணி செய்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வீரராகவ ராவ் உள்ளிட்டோரை சந்தித்து கள நிலவரத்தை அறிய உள்ளேன்” என்றார்.