சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று சிகிச்சைக்கு 12,658 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை கொண்ட சிறப்பு கரோனா சிகிச்சை மையத்தில் மேலும் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதி கொண்ட 2-வது கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை நேற்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தையும் சேர்த்து மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்கு 12,658 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், 7,065 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடையது.
சேலம் மாவட்டத்தில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தினசரி 6,000 பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் 9,404 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தொற்றுப் பரவல் 10 சதவீதமாக குறைந்துள்ளது.
மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடைசி நேரத்தில் சிகிச்சைக்கு வருவதால் உயிரிழப்பு தவிர்க்க முடியவில்லை. எனவே, காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளோம்.
முதல்வர் ஸ்டாலின் இன்று (11-ம் தேதி) மாலை சேலம் வருகிறார். நாளை (12-ம் தேதி) காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்கிறார். சேலம் உருக்காலை வளாகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 310 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 280 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
கரோனா 3-வது அலை வரக்கூடாது. ஒருவேளை வந்தால், அதை எதிர்கொள்ள மருத்துவ கட்டமைப்புகளை முதல்வர் வலுவாக்கியுள்ளார். மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.
தடுப்பூசியைப் பொருத்தவரை கையிருப்பில் இருக்கும் அளவு அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மே மாத மின் கட்டணத்தை இப்போது செலுத்தலாம் என்ற அறிவிப்பை 85 சதவீதம் பேர் ஏற்றுக் கொண்டுள்ளனர். மீதமுள்ள 10 முதல் 15 சதவீதம் பேர் வரை கடந்த மாத மின் கட்டணத்தை செலுத்தலாம். 3-வது வாய்ப்பாக, மின் அளவீட்டு மீட்டரில் உள்ள அளவீட்டினை போட்டோ எடுத்து அதை காண்பித்தும் மின் கட்டணம் செலுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் கார்மேகம், மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா, எம்.பி-க்கள் பார்த்திபன் (சேலம்), சின்ராஜ் (நாமக்கல்) செந்தில்குமார் (தருமபுரி) எம்எல்ஏ-க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, சேலம் அரசு மருத்துவமனை டீன் வள்ளி சத்யமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.