தமிழகம்

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் கோயம்பேட்டில் - வியாபாரம் செய்ய அனுமதி இல்லை: வியாபாரிகளுக்கு சந்தை நிர்வாகம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கோயம்பேடு சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோயம்பேடு சந்தை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கரோனா தொற்றைப் பரப்பும் முக்கிய இடமாக கோயம்பேடு சந்தை மாறியது. கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று அப்போது உறுதி செய்யப்பட்டது.

இதே நிலை இந்த ஆண்டு வந்துவிடக்கூடாது என்பதற்காக சந்தை முழுவதும் உள்ள அனைத்து வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சந்தை நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பாக கோயம்பேடு சந்தை முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோயம்பேடு மொத்த விற்பனை சந்தை வளாகத்தில் கரோனா தொற்று 2-வது அலை பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி மற்றும் சந்தையில் உள்ள பல்வேறு சங்கங்கள் இணைந்து, கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வளாகத்தில் ஆங்காங்கே கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதை அனைவரும் பயன்படுத்தி, கரோனா தொற்று இல்லாத வளாகமாக கோயம்பேடு சந்தையை மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

அடுத்த 10 நாட்களுக்குப் பிறகு, வளாகத்தில் பணியாற்றும் நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பது தெரியவந்தால், அத்தகைய நபர்களை தொடர்புடைய கடையில் வியாபாரம் செய்ய அனுமதிக்க இயலாது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தையில் மாநகராட்சி நடத்திவரும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் இதுவரை 8,239 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டு இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT