குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டும் தனியார் பங்களிப்புடன் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இதை ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு மருத்துவமனை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ், மருத்துவப் பணிகள் கூடுதல் இயக்குநர் அசோக்குமார், காஞ்சி மண்டல இணை இயக்குநர் ஜீவா, செங்கை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் பிரியா ராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, குரோம்பேட்டை மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் பழனிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆக்சிஜன் ஆலையில் நிமிடத்துக்கு 87 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இந்த மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 200 படுக்கைகள் உள்ளன. இதில் 100 ஆக்சிஜன் வசதியுடனும், 100 ஆக்சிஜன் செறியூட்டிகளுடனும் உள்ளன. இந்த ஆலை அமைக்கப்பட்டதன் மூலம் மருத்துவமனையின் 50 சதவீத ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு பேசியதாவது:
மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜனை இங்கேயே உற்பத்தி செய்யும் வகையில் தனியார் நிறுவனம் ஏற்படுத்தி தந்துள்ளது. கரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மத்திய அமைச்சரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச இருக்கிறேன். மத்திய அரசு தடுப்பூசிகளை தருவதாக கூறியுள்ளது. ஆனால், எப்போது என்று தெளிவாக தெரியவில்லை. தடுப்பூசிகளை வாங்குவதற்கு அல்லது தயாரிப்பதற்கு என்று எந்த நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை தமிழக அரசு கேட்டது. ஆனால், மத்திய அரசு இசைவு தெரிவிக்கவில்லை. மாநில அரசுடன் சேர்ந்து தயாரிக்கவும் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களே நடத்தவும் முன்னேற்பாடுகளை செய்யவில்லை.
இதேபோல் 113 ஆண்டுகளுக்கு முன் குன்னூரில் நிறுவப்பட்ட தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தை தமிழக அரசிடம் கொடுத்தால் கூட மருந்து தயாரிக்கலாம். மக்களுக்கு உபயோகப்படும் அளவில் தடுப்பு மருந்துகளை தயார் செய்வது குறித்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.