புதுச்சேரியில் கதிர்காமம் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்ட கரோனா சிகிச் சைக்கான ஆயுஷ் மருத்துவமனை சரிவர பேணப்படாததால், நோயாளிகள் அதனை தவிர்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.
தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு அலோபதி மருத்துவத்துடன் சித்த மருத்துவம் மற்றும் இயற்கை நல மருத்துவ (நேச்ரோபதி) முறையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமானோர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஒரு பகுதி ஆயுஷ் மருத்துவமனையாக மாற் றப்பட்டுள்ளது.
இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கைகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. இதன் காரணமாக, புதுவை முழுவதும் இயங்கி வந்த சித்த மருத்துவம், ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி சிகிச்சைப் பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தப் பட்டன. அங்கு பணியாற்றிய மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் இந்த கரோனா ஆயுஷ் மருத்துவமனையில் சுழற்சி முறையில் பணிபுரியுமாறு உத்தரவிடப்பட்டது.
ஆனாலும், ஆயுஷ் மருத்துவமனையில் சரிவர சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
இதுதொடர்பாக விசாரித்தபோது, "கரோனா சிகிச்சைக்காக ஆயுஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஒவ்வொரு வேளைக்கும் ஒவ்வொரு துறை மருத்துவர்கள் வருகிறார்கள். காலையில் சித்தா, மதியம் ஆயுர்வேதா, இரவு ஹோமியோபதி என வருகிறார்கள். இதனால் குழப்பமே ஏற்படுகிறது. தமிழகத்தைப் போல் சித்த மருத்துவமும் அலோபதியும் இணைந்து கூட்டு சிகிச்சையோ, பாரம்பரிய முறையில் உடல் நலனை மேம்படுத்தும் உணவுகளோ தருவதில்லை. இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் இருந்துதான் உணவு வருகிறது. தரமான பாரம்பரிய மருத்துவ சிகிச்சையே இல்லை." என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மத்திய அரசின் ஆயுஷ் வட்டாரங்களில் விசாரித்தபோது, " புதுவையில் அவசர கதியில் ஆயுஷ் மருத்துவமனையை தொடங்கி, ‘கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளியுங்கள்’ என்கிறார்கள். அதுவும் ஒரு ஷிப்ட்டுக்கு ஒரு மருத்துவர், ஒரு மருந்தாளுநர் என 3 ஷிப்ட்டுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேளைக்கும் ஒவ்வொரு துறை மருத்துவரை நியமித்து உத்தரவு போட்டுள்ளனர். அதனால் ஒரு வேளைக்கு சித்த மருத்துவரும், மற்றொரு வேளைக்கு ஆயுர்வேத மருத்துவரும், மற்றொரு வேளையில் ஹோமியோபதி மருத்துவரும் மாறி மாறி வருகின்றனர். தமிழகத்தில் சித்த மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவ முறையில் முறையாக வகைப்படுத்தப்பட்டு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தருகிறது. அதுபோல் இங்கு இல்லை.
இதுதவிர, இத்துறையின் இயக்குநராக ஆயுஷிலிருந்து நியமிக்காமல் அலோபதி தரப்பிலிருந்து மருத்துவரை நியமித்துள்ளதால் இக்குளறுபடி நிலவுகிறது. உச்சக்கட்டமாக ஒரு ஷிப்டுக்கு ஒரு மருத்துவர் மட்டும் பணியில் இருக்கின்றனர்" என்கின்றனர்.
இந்தச் சிக்கலால் இங்கு மருத்துவம் பெறுவதை கரோனா நோயாளிகள் தவிர்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.