அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்பே இல்லை என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். சி.வி.சண்முகம் பனங்காட்டு நரி, அவர் எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டார் எனவும் கே.சி.வீரமணி கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்குச் சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு எம்எல்ஏ அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
இதையடுத்து, 1,000 தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா நிவாரண உதவியாக அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
பிறகு, செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:
''வாணியம்பாடி தொகுதியில் எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தொகுதிக்கு உட்பட்ட மக்கள் தங்கள் பகுதிக்கான பிரச்சினைகளை இந்த அலுவலகத்தில் தெரிவித்து அதற்கான தீர்வைக் காணலாம். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர் நலத்துறை முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபீலை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதைக் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்.
கடந்த சில நாட்களாக அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி வருகிறது. அது முழுக்க, முழுக்கப் பொய்யான தகவல். அதுபோன்ற சம்பவம் தற்போது எங்கும் நிகழவில்லை. அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். இதை முன்னாள் முதல்வர் பழனிசாமி ஏற்கெனவே கூறிவிட்டார். அதிமுகவினர் தெளிவாக உள்ளனர். அவர்களைக் குழப்பவே இதுபோன்ற பொய்யான ஆடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர். மீண்டும் அவர் கட்சியில் இணைய வாய்ப்பே இல்லை. கட்சி உயர்மட்டக் குழு ஒன்று கூடி இதற்கான அறிவிப்பை வெளியிடும். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டையாகும். இங்கு கட்சியினரிடம் எந்த சலசலப்பும் இல்லை.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியிலேயே ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் கட்சியை வழிநடத்தி வருகின்றனர். கட்சித் தலைமை விதிக்கும் கட்டளையை அதிமுகவினர் நிறைவேற்றும் வகையிலேயே எங்கள் செயல்பாடு உள்ளது.
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளை அவர் பலமுறை சந்தித்துள்ளார். சி.வி.சண்முகம் பனங்காட்டு நரி, எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டார். அவர் மட்டும் அல்ல, அதிமுகவினர் யாரும் அஞ்சமாட்டோம்.''
இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வாணியம்பாடி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கோ.வி.சம்பத்குமார், திருப்பத்தூர் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், நகரச் செயலாளர் சதாசிவம், ஒன்றியச் செயலாளர் சாம்ராஜ், மாவட்ட மகளிரணிச் செயலாளர் மஞ்சுளாகந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.