விசாரணைக் கைதி கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியை மாற்ற காவலர் புகார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் பணியில் சேர்ந்ததை மறுபரிசீலனை செய்ய டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கரிக்கன் நகரைச் சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரை பாகூர் காவல் நிலைய போலீஸார் பிடித்துச் சென்றனர். அவர் மீது மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குப் போட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். அப்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. பின்னர், அவர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
காவல் நிலையத்திலும், சிறையிலும் அவர் தாக்கப்பட்டதுதான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு இவ்வழக்கில் அப்போதைய பாகூர் காவல்நிலைய எஸ்.ஐ. ஜெயகுருநாதன், உதவி எஸ்.ஐ. திருமால், காலாப்பட்டு மத்திய சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறை மருத்துவ அதிகாரி டாக்டர் வெங்கட ரமண நாயக் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் காவலர் புகார் ஆணையம் உத்தரவின் பேரில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இதன் பின்னர். இவ்வழக்கு பி.சி.ஆர். பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது இவ்வழக்கு விசாரணையை பி.சி.ஆர். பிரிவு எஸ்.பி. பாலகிருட்டிணன் மேற்கொண்டு வருகிறார்.
இது தொடர்பாக மக்கள் உரிமை கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன் கூறுகையில், "விசாரணை அதிகாரி, தனது விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட போலீஸார், சிறைக் கண்காணிப்பாளர் என எவரையும் கைது செய்யவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தவுடன் வேறு வழியின்றி சரணடைந்தனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி குற்றம் நடந்து 2 மாதத்திற்குள் விசாரணையை முடித்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். 07.08.2019 அன்று உயர் நீதிமன்றம் 4 மாதத்திற்குள் குற்ற அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டது. ஆனால், இதுநாள்வரையில் விசாரணை முடித்து குற்ற அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், இவ்வழக்கில் விசாரணையையே தொடங்காததால் பாதிக்கப்பட்ட ஜெயமூர்த்தியின் மனைவி கெளசல்யாவிற்கு 1 லட்சம் ரூபாய் உடனே அரசு வழங்க வேண்டும். இத்தொகையை விசாரணையைத் தொடங்காத காவல் அதிகாரிகள் யாரென்று கண்டறிந்து அவர்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இதன்மீது விசாரணை மேற்கொண்ட காவல்துறை விசாரணை அதிகாரியான பி.சி.ஆர். பிரிவு எஸ்.பி., அப்போதைய சி.பி.சி.ஐ.டி. காவல் ஆய்வாளர் ஆகியோரின் சம்பளத்தில் இருந்து தலா 50 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்துள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஐ. ஜெயகுருநாதன், உதவி எஸ்.ஐ. திருமால், சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோரது பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விசாரணையை முடித்து உரிய காலத்தில் குற்ற அறிக்கையைத் தாக்கல் செய்யத் தவறிய, விசாரணையையே தொடங்காததால் ரூபாய் 50 ஆயிரம் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டவருமான பி.சி.ஆர். பிரிவு எஸ்.பி. இவ்வழக்கை விசாரித்தால் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்காது. எனவே, இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரியை மாற்றவும், மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட காவல் அதிகாரிகள், சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோரைப் பணிநீக்கம் செய்யவும் உத்தரவிட வேண்டுமென காவலர் புகார் ஆணையத்தில் மனு அளித்தோம்.
இம்மனு மீது விசாரணை மேற்கொண்ட காவலர் புகார் ஆணையத் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராஜசூர்யா, உத்தரவைப் பிறப்பித்தார். அதில் வழக்கு விசாரணையைத் தற்போதைய விசாரணை அதிகாரியிடம் இருந்து மாற்றி வேறொரு அதிகாரியிடம் ஒப்படைக்கவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்த்ததை மறுபரிசீலனை செய்யவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த வலியுறுத்தி துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோருக்கு மனு அளித்துள்ளோம்" என்று குறிப்பிட்டார்.