தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குனராக காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் குறிப்பாக கவனிக்கப்பட்ட துறை லஞ்ச ஒழிப்புத்துறை ஆகும். முன்னாள் அமைச்சர்கள் தொடங்கி சாதாரண அரசு ஊழியர் வரை ஊழல், முறைகேடுகள் குறித்த புகார்களை விசாரிக்கும் அமைப்பு லஞ்ச ஒழிப்புத்துறை ஆகும்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார், டெண்டர் முறைகேடு உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களை விசாரித்து தண்டனை வாங்கித்தரும் முக்கியத் துறை லஞ்ச ஒழிப்புத்துறை ஆகும்.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் லஞ்ச ஒழிப்புத்துறையில் முக்கிய அதிகாரிகள் டிஜிபி முதல் கடைக்கோடி ஆய்வாளர் வரை பார்த்து பார்த்துப் பணியில் அமர்த்தப்படுகின்றனர். சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு டிஜிபி பதவி நிலை உயர்த்தப்பட்டு கந்தசாமி நியமிக்கப்பட்டார். ஐஜி அந்தஸ்தில் ஒரு அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் டிஐஜி அந்தஸ்தில் இருக்கும் பெண் அதிகாரி லட்சுமி லஞ்ச ஒழிப்புத்துறையில் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். 1997ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வில் தேர்வு பெற்று டிஎஸ்பியாகப் பதவியில் அமர்ந்தார். பின்னர் எஸ்.பி.யாகப் பதவி உயர்வு பெற்றார். ஐபிஎஸ் அதிகாரியாக நிலை உயர்த்தப்பட்ட இவர், சமீபத்தில் டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராகப் பதவி வகித்தார்.
பின்னர் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.