40 நாட்களில் 21 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தள்ளுவண்டியில் ஆட்டோவை ஏற்றி நூதனப் போராட்டம் புதுச்சேரியில் நடந்தது.
மத்திய பாஜக அரசு உயர்த்திய பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி ஏஐடியுசி ஆட்டோ, சுற்றுலா வாகனம், பேருந்து, லோடு கேரியர் ஆகிய சங்கங்களின் சார்பில் போராட்டம் இன்று புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு இசிஆர் சாலையில் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் சேதுசெல்வம், ஆட்டோ சங்கத் தலைவர் சேகர், நகரப் பேருந்து தொழிலாளர் சங்கத் தலைவர் மரி கிறிஸ்டோபர், சுற்றுலா வாகன சங்கச் செயலாளர் தமிழ்மணி, லோடு கேரியர் சங்கச் செயலாளர் செந்தில்முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியுசி மாநில செயல் தலைவர் அபிஷேகம், ஏஐடியுசி மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தின்போது எரிபொருள் விலை உயர்வால் தற்போதைய சூழலைச் சுட்டிக்காட்டி ஆட்டோவைத் தள்ளுவண்டியில் ஏற்றி நூதன முறையில் போராடினர்.
போராட்டம் தொடர்பாக ஏஐடியூசி மாநிலப் பொதுச் செயலர் சேதுசெல்வம் கூறுகையில், "கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை காரணமாக மக்கள் வேலையின்றி வருமானம் இல்லாமல் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளார்கள். கரோனா பெருந்தொற்றைத் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து வருகின்றன. இதன் காரணமாக அமைப்புசாரா தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்களும் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 9ஆம் தேதி வரையிலான 40 நாளில் புதுச்சேரியில் 21 முறை உயர்ந்துள்ளது. குறிப்பாக பெட்ரோல் விலை ரூ.5.25-ம், டீசல் விலை ரூ.6.06-ம் உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக புதுச்சேரியில் தற்போது பெட்ரோல் 1 லிட்டர் 95.81க்கும் டீசல் 90.08க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக மக்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து வருகிறது. இதனை மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளாமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்துத் தொழிலை நம்பியுள்ள ஆட்டோ, பேருந்து, லாரி, லோடு கேரியர், சுற்றுலா வாகனம் ஆகிய தொழில்கள் முடங்குவது மட்டுமின்றி போக்குவரத்துக் கட்டணமும் உயரக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டார்.