தமிழகம்

தென் அமெரிக்க அரிய வகை ஓணான் முட்டைகளில் இருந்து ஐந்து முறை இரட்டைகளாக வெளிவந்த ஓணான் குட்டிகள்: உலகில் இதுவரை நிகழ்ந்திராத அரிய நிகழ்வு

கார்த்திக் கிருஷ்ணா சி.எஸ்

தென் அமெரிக்காவைச் சேர்ந்த அரிய வகை ஓணான் முட்டைகளில் இருந்து அடுத்தடுத்து 5 முறை இரட்டைகளாக ஓணான் குட்டிகள் வெளிவந்துள்ளன. உலக அளவில் இதுவரை நிகழ்ந்திராத அரிய நிகழ்வாக இது கருதப்படுகிறது.

நம் நாட்டில் நாய், பூனை, மீன் போன்ற செல்லப்பிராணிகளை ஏராளமானோர் வளர்த்து வந்தாலும், ஊர்வனவற்றை வளர்ப்போர் மிகவும் குறைவு. இந்த நிலையில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த விஜய் என்பவர், கடந்த 5 வருடங்களாக ஊர்வனவற்றை வளர்த்து, பாதுகாத்து, அவற்றை இனப்பெருக்கமும் செய்துவருகிறார். அவர் வளர்த்து வரும் தென்அமெரிக்க வகை ஓணானின் முட்டைகளில்இருந்து இரட்டைக் குட்டிகளாக வெளிவந்துள்ளன.

‘இகுவானா’ எனப்படும் தென் அமெரிக்கா ஓணான் வகைகள், முதுகெலும்புள்ள ஊர்வன வகையைச் சேர்ந்தவை. 5 முதல் 6 அடி நீளம் வரை வளரும் இந்த பெரிய ஓணான்களில் பெரும்பாலானவை தாவரங்களை உண்பவை. இந்த வகை ஓணான்கள் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை முட்டையிடும். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் அடைகாத்து ஜூன் மாத இறுதியில் குட்டிகள் வெளிவரும். அந்த வகையில், விஜய்க்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

இவர் வளர்த்து வந்த தென் அமெரிக்க ஓணான்களில் ஒன்று இட்ட முட்டையிலிருந்து இரட்டைக் குட்டிகள் வெளிவந்துள்ளன. இதுபோல் இரட்டைக் குட்டிகள் வருவது தென் அமெரிக்க ஓணான் வகைகளில் மிகமிக அரிதானது. உலகளவில் ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே இவ்வாறு நடந்துள்ளது.

இந்த ஆச்சரியம் முதல் இரட்டைக் குட்டிகளுடன் நின்றுவிடவில்லை, அதே வகை ஓணான் இட்ட மற்ற 3 முட்டைகளில் இருந்தும் இரட்டையாகவே குட்டிகள் வெளிவந்துள்ளன. இந்த நான்கு ஜோடி இரட்டைப் பிறவிகளோடு தற்போது, ஒரு முட்டையிலிருந்து மூன்று குட்டிகள் வெளிவந்துள்ளன. ஆனால், அவற்றில் ஒன்று முழு வளர்ச்சி பெறாமல் சில மணி நேரத்தில் இறந்துவிட்டது. அதேநேரம் மற்ற ஐந்து இரட்டைக் குட்டிகள் தற்போது ஆரோக்கியமாக உள்ளன.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த விஜய், தனது வீட்டில் வளர்த்து வரும் ஓணான்கள்.

இந்த நிகழ்வு குறித்து, உலகளவில் பல்வேறு நிபுணர்களிடம் விஜய் பேசியுள்ளார். அதில், இதுபோல் தென் அமெரிக்க ஓணான் முட்டைகளிலிருந்து ஐந்து ஜோடி இரட்டைக் குட்டிகள் வெளிவருவது இதுவே முதல்முறை என்று தெரியவந்துள்ளது. இதுபோன்ற அரிய நிகழ்வு, செல்லப்பிராணி வளர்ப்பிலும் இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை.

தற்போது இந்தக் குட்டிகள் அனைத்தையும், உணவு கொடுத்து கவனமாகப் பராமரித்து வருகிறார் விஜய். தென் அமெரிக்கப் பச்சை ஓணான் வகையைச் சேர்ந்தவை இந்த செல்லப்பிராணிகள். அதேநேரம் வண்ணப் பிறழ்வு ஏற்பட்டு இவை சிவப்பு ஓணான்களாக உள்ளன என்கிறார்.

இவர் வளர்த்துக் கொடுத்த தென் அமெரிக்க ஓணான் வகைகள் சென்னை கிண்டி பாம்பு பண்ணை, ஒடிசாவின் நந்தன்கானன் உயிரியல் பூங்கா ஆகியவற்றில் உள்ளன.

கடந்த காலத்தைவிட ஊர்வனவற்றை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதாகச் சொல்கிறார் விஜய். அவர் மேலும் கூறும்போது, ‘‘எங்கள் வீட்டில் வளர்க்கப்படும் தென் அமெரிக்க ஓணான்களை என் மகனே கையாள்கிறார். அவற்றின் தோற்றம், உறுதியான தோல், முள் போன்ற அமைப்பு ஆகியவை பலருக்கும் பிடித்துள்ளன. மேலும் இவை தாவர உண்ணிகள் என்பதால் மிகவும் பாதுகாப்பானவை. பழங்கள், தாவரங்கள் போன்றவற்றைக் கொடுத்தாலே போதும். அதுவும் இவற்றின் மீது ஆர்வம் அதிகரித்திருப்பதற்கு ஒரு காரணம்.


பொதுவாக தங்களுக்கு எதிராக ஆபத்து நேர்ந்தால் வாலால் தாக்கும் தன்மை கொண்டவை இவை. ஆனால் குட்டியாக இருக்கும் பொழுதில் இருந்தே மனிதர்கள் கையாள ஆரம்பித்து விடுவதால், அவை மனிதச் சூழலுக்குப் பழகி, நட்புடன் இருக்கின்றன’’ என்றார்.

SCROLL FOR NEXT