போலி விதையால் விளைந்துள்ள பெரிய வெங்காயம். 
தமிழகம்

சின்ன வெங்காயம் விதைத்தவர்களுக்கு விளைந்தது பெரிய வெங்காயம்: போலி விதை விநியோகத்தால் விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு

இரா.கார்த்திகேயன்

பல்லடம் பகுதியில் போலி விதை விற்பனையால் சின்ன வெங்காயம் பயிரிட்டு அறுவடைக்கு காத்திருந்த விவசாயிகளின் தோட்டத்தில் பெரிய வெங்காயம் விளைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சின்ன வெங்காய சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கள்ளிப்பாளையம், வாவிபாளையம், குள்ளம்பாளையம், கெரடமுத்தூர் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பொங்கலூர் அருகே கள்ளிப்பாளையத்தில் உள்ள தனியார் உரக்கடையில், 51 கிலோ சின்ன வெங்காய விதையை வாங்கி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பயிரிட்டனர். இதில் பலரது தோட்டத்தில் பெரிய வெங்காயம் விளைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக, குள்ளம்பாளையத்தை சேர்ந்த விவசாயி சரண்கூறியதாவது: எங்கள் பகுதியில்விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர். தற்போது, பெரிய வெங்காயத்துக்கும், சின்ன வெங்காயத்துக்கும் இடைப்பட்ட ரகமான ’சித்து பல்லாரி’ விளைந்துள்ளது. பெரிய வெங்காய வகையைச் சேர்ந்த ‘சித்து பல்லாரி’க்கு சந்தையில் போதிய விலை இல்லை. ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் பயிரிட்டால், 7 முதல் 10 டன் மகசூல் கிடைக்கும். தற்போது சித்து பல்லாரி ரகம் 4-5 டன் விளைச்சல் தான் கிடைத்துள்ளது” என்றார்.

கெரடமுத்தூரைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் கூறும்போது, ‘‘போலி விதையால் 5 மாத உழைப்பு,செலவு அனைத்தும் வீணாகிவிட்டது. தற்போது பல்லடம் பகுதியில் 51 ஏக்கரில் போடப்பட்ட 51 கிலோ போலி விதையால், பலலட்சங்களை விவசாயிகள் இழந்துள்ளோம்.

ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை செலவாகிறது. கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்டோம். தற்போது போலி விதையால் விளைச்சல் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது சம்பந்தப்பட்ட விதை நிறுவனம் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துள்ளது. போலி விதையை விற்கும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பேச்சுவார்த்தை - இழப்பீடு

பல்லடம் பகுதி விவசாயிகள், எம்எல்ஏ எம்.எஸ்.எம்.ஆனந்தன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி ஆகியோரிடம் முறையிட்டனர். இதையடுத்து, விவசாயிகளின் வயலில் ஆய்வு செய்து போலி விதை விவகாரம் தொடர்பாக, நிறுவனத்திடம் வேளாண் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட 57 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் விதை ஆய்வு துணை இயக்குநர் சு.வெங்கடாச்சலம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘திண்டுக்கல்லில் உள்ள நிறுவனத்தில் இருந்துவிதையை வாங்கி, கள்ளிப்பாளையத்தில் உள்ள உர நிறுவனம் விவசாயிகளிடம் விற்றுள்ளது. களத்தில் சென்று ஆய்வு செய்ததில்போலி விதைகள் என தெரியவந்தது. தற்போது நிறுவனம் தரப்பில், ஒரு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் இழப்பீடு தருவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT