தஞ்சாவூர் மாவட்ட கிராம பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பட்டுக்கோட்டையை அடுத்த பள்ளிகொண்டான் ஊராட்சி மன்றத் தலைவரான மகாலிங்கம், கடந்த 20 நாட்களாக ஊராட்சிக்குட்பட்ட 2 நுழைவுப் பகுதியிலும், அதே ஊராட்சிக்குட்பட்ட செட்டியக்காட்டில் ஒரு இடத்திலும் சோதனைச் சாவடி அமைத்துள்ளார். அங்கு, தூய்மைப் பணியாளர்கள் மட்டுமின்றி தன்னார்வலர்களையும் தனது சொந்த செலவில், சம்பளம் மற்றும் உணவு வழங்கி நியமித்து உள்ளார்.
ஊர்க்காரர்கள், ஊருக்கு புதிதாக வரும் நபர்கள் அனைவருக்கும், சோதனைச் சாவடியில் பணியில் உள்ளவர்கள் தெர்மல்ஸ் கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை, பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு ஆக்சிஜன் அளவு கண்டறிதல், ரத்த அழுத்த சோதனை செய்து, அதன் பிறகே அவர்களை ஊருக்குள் அனுமதிக்கின்றனர்.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர் மகாலிங்கம் கூறும்போது, "கடந்த ஒருமாதத்துக்கு முன்பு, கிராமத்தில் 11 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதையடுத்து, ஊருக்குள் இனியும் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படக்கூடாது என முடிவு செய்து, சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.
இங்கு பணியாற்றுபவர்கள் காலை 6 மணி முதல் இரவு வரை யார் வந்தாலும் உரிய பரிசோதனைகளை செய்த பிறகேஊருக்குள் அனுமதிக்கின்றனர். இதனால், பள்ளிகொண்டான் ஊராட்சி கடந்த 20 நாட்களாக தொற்று இல்லாத கிராமமாக உள்ளது" என்றார்.