பத்திரப் பதிவுத் துறையில் பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்க புதிய கட்டுப்பாட்டு அறை விரைவில் அமைக்கப்படும் என பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை திருமலைநாயக்கர் மகால் அருகேயுள்ள மாவட்ட பத்திரப் பதிவு அலுவலர் அலுவலகத்தில் அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஜூன் 7 முதல் பத்திரப் பதிவு நடக்கிறது. பதிவு அலுவலகத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல் சரியான கட்டணத்துடன் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆவணங்களைப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் புதிதாக கட்டுப்பாட்டு அறை விரைவில் திறக்கப்படும். இங்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் விசாரணை நடத்தப்படும். பதிவு அலுவலகத்திலும், வணிக வரித் துறையிலும் சில தவறான பதிவுகள் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இதுகுறித்து விசாரணை நடக்கிறது. வணிகத்திலேயே ஈடுபடாத சில அமைப்புகளைப் பயன்படுத்தி போலி பில்களை தயாரித்து உள்ளீட்டு வரி வரவு வைப்பதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் 2017-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற குற்றங்களைக் கண்காணிக்கத் தவறும் வணிக வரி அலுவலர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.