கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ளவீதி ஒன்றில் 50 பேருக்கு கரோனாவைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக் கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோவை மாவட்டம்கரோனா தொற்று பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வருகிறது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படு வோரில் 50 சதவீதத்துக்கும் மேற்பட் டோர் மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த வர்களாக உள்ளனர். இதனால் மாந கராட்சி பகுதியில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன் ஒருபகுதியாக மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் அனைத்து வீதிகளுக்கும் சென்று சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கும் மற்றும் அவசியமானோருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின் றனர். அதன்படி மாநகராட்சி கிழக்குமண்டலத்துக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் மேற்கு புதூர் பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக 658 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நேற்று முன்தினம் சுமார் 50 பேருக்கு தொற்று உறுதியானதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து நஞ்சுண்டாபுரத்தில் அந்த வீதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் யாரும் வெளியில் செல்லாதவாறும், புதிதாக யாரும் உள்ளே வராத வகையிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. அதோடு தொற்று மேலும் யாருக்கும் பரவாத வகையில், பாதிக்கப்பட்ட பகுதியை ஒட்டியுள்ள நடராஜ நாடார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சியினர் கரோனா பரிசோதனை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் மாநகராட்சி தெற்கு மண்டலம் 86-வது வார்டுக்கு உட்பட்ட செல்வபுரம் நகர் நல மையம், 76-வது வார்டு முத்துசாமி காலனி பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை நேரில் பார்வையிட்டார். அப்போது, வீடுகளில் வசிப்பவர்களிடம் அத்தி யாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கிறதா, நாள்தோறும் களப்பணியாளர்கள் பரிசோதனைக்கு வருகிறார்களா என்பதையும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தெற்கு மண்டல கண்காணிப்பு அலுவலர் ப.காந்திமதி, உதவி ஆணையர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.