கரோனா ஊரடங்கு அறிவிப்பால் உடுமலை கூடுதல் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
கோவை, மேட்டுப்பாளையம், பழநி, திண்டுக்கல், மதுரை,திருப்பூர், ஈரோடு, கேரள மாநிலம் மூணாறு, மறையூர் உட்பட பல பகுதிகளில் இருந்து,உடுமலைக்கு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.கரோனா தொற்று பரவலால் பொதுபோக்குவரத்துக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான நாட்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதால், உடுமலை பேருந்து நிலையத்தில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பேருந்து நிலையத்தை ஒட்டிய குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்தி, கூடுதல் பேருந்து நிலையம் கட்ட நகராட்சி நடவடிக்கை எடுத்தது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, உடுமலைநகராட்சியின் வளர்ச்சிக்கென ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கூடுதல் பேருந்து நிலையம் கட்டுவதற்காக ரூ.3.75கோடி ஒதுக்கப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் நாள் அறிவிப்பதற்குமுன் அவசரகதியில் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பூமி பூஜை நடைபெற்றது. அதன்பின் 3 மாதங்கள் ஆகியும், எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கரோனாவால் பணிகள் தாமதம்
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஓடை தூர்வாருதல், பூங்கா பராமரித்தல், கூடுதல் பேருந்து நிலையம், சந்தை மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.50 கோடி நிதி பெறப்பட்டு, பூமி பூஜை போடப்பட்டது. அதன்பின் தேர்தல் தேதி அறிவிப்பு, கரோனா ஊரடங்கு என பல காரணங்களால் பணிகள் நடைபெறவில்லை. தற்போது ஓடைகள் அளவீடு செய்யும் பணிகள் நிறைவடைந்து, கூடுதல் பேருந்து நிலையம் கட்டுவதற்கு அளவீடு செய்யும் பணிகள் நேற்று தொடங்கியுள்ளன. இப்பணிகளை முடிக்க 12 மாத காலஅவகாசம் உள்ளது. அதற்குள் பணிகள் நிறைவடையும்.
கூடுதல் பேருந்து நிலையத்தில் பழநி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் 15 எண்ணிக்கையில் நிறுத்தும் வசதியும், ஓர் உணவகம், 12 கடைகள், காத்திருப்போர் கூடம், கழிவறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தற்போதைய பேருந்து நிலையத்தில் இருந்து, கூடுதல் பேருந்து நிலையத்துக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையை கடந்துதான் மக்கள் செல்ல வேண்டும். தற்போதைய நிதி ஒதுக்கீட்டில், இதற்குஎந்தத் தீர்வும் இல்லை. கூடுதல் பேருந்து நிலையம் கட்டப்படும்இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் வாடகை வாகனங்களை, தற்காலிகமாக அனுசம் நகர் பூங்கா இடத்தில் நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.