நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் புதுச்சேரி முதல்வர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை என முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
அண்டை மாநிலமான தமிழகத்தில் ஊரடங்கு தளர்வில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. ஆனால், புதுச்சேரியில் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மாநிலஎல்லையில் உள்ள மதுக்கடைகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். மதுக்கடைகளை திறந்ததன் மூலம் கரோனா அதிகரித்தால் அதற்கான முழு பொறுப்பை ரங்கசாமியே ஏற்க வேண்டும்.
அரசியல் துரோகிகள் நிறைய பேர் புதுச்சேரியில் தற்போதுவெற்றி பெற்று வந்துள்ளனர். சில அரசியல் கோமாளிகளும் வந்துள்ளனர். எங்கள் ஆட்சியில்இவர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தோம். ‘கள்ளச்சாராயத்தை குடித்து இறக்கின்றனர்.எனவே மதுக்கடைகளை திறக்க வேண்டும்’ என்று ஆளுநரைச் சந்தித்து ஒருவர் கூறுகிறார். கரோனாவால் ஒரு மாதத்தில் 750 பேர் இறந்ததுஇவர் கண்ணுக்கு தெரியவில்லை. இம்மாதிரியான அரசியல் கோமாளிகளை கட்டுக்குள் வைத்திருக்க அரசால் முடியவில்லை.
பிரதமர் மோடி எடுத்த முடிவின் அடிப்படையில் பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் நீட் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இது எந்த வகையில் நியாயம்? தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரி முதல்வர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமருக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
தற்போது பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி விட்டது. டீசல்விலை ரூ.92-க்கு வந்து விட்டது. காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலையை 1 ரூபாய் உயர்த்தினால் தெருவில் இறங்கி போராடிய பாஜக, இன்று வாயை மூடிக் கொண்டிருக்கிறது. கட்சித் தலைமை உத்தரவின் படி வரும்11-ம் தேதி புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தஉள்ளோம். தேர்தல் முடிவு வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகியும் புதுச்சேரியில் முதல்வரை தவிர அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்கவில்லை. அதிகார சண்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றவில்லை மக்களுக்கு பயனளிக்காமல் இந்த ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
‘என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி வந்தால் மத்தியில் இருந்து பல்லாயிரணக்கான கோடிரூபாயை கொண்டு வந்து மாநிலத்தில் வளர்ச்சியை காண்போம்’ என்று கூறினார்கள். அவர்கள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
‘நிதியில்லாமல் ஏன் அறிவித்தீர்கள்?’
“ ஊரடங்கால் மக்களுக்கு வாழ்வாதாரம் இல்லை; வேலையில்லை. இந்த நேரத்தில் மக்களுக்குத் தர வேண்டிய நிவாரணத்தை ஒரே தவனையில் அரசால் கொடுக்க முடியவில்லை. இதை தர ‘நிதியில்லை’ என்கிறார்கள். நிதியில்லாமல் முதல்வர் எப்படி ரூ. 3 ஆயிரம் நிவாரணம் தருவதாக அறிவித்தார்?” என்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.