திருநெல்வேலியில் எதிர்க்கட்சி தலைவர் பழனி சாமியை கண்டி த்தும், ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்தும் ஒட்டப் பட்டுள்ள சுவரொட்டிகளால் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் என்ற பெயரில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் படங்களுடன் இந்த சுவரொட்டிகளில், “அதிமுக கட்சி செயல்பாடுகளில் மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர்
ஓ.பன்னீர்செல்வம் அவர் களிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த விதமான செயல்பாடுகளோ, நடவடிக்கைகளோ செய்யாதே. அவ்வாறு செய்ததால் தான் தேர்தலில் தோற்றுப்போனோம். இனிமேலும் தொடர்ந்தால் தலைமைக் கழகத்தை முற்றுகையிடுவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “இதுபோன்று சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது என்று அதிமுக தலைமை அறிவித்திருக்கும் நிலையில், இப்படி பெயர் அறிவிக்காமல் சுவரொட்டிகளை ஒட்டியிருப்பது திமுக, அமமுகவின் சதி வேலையாக இருக்கலாம்” என்று தெரிவித்தனர்.