தமிழகம்

வெள்ளத்தால் இழந்த அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசே வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மழை வெள்ளத்தால் தமிழக மக்கள் இழந்த அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசே வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அக்டோபர் மாதத்திலேயே தெரிவித்திருந்த போதிலும், அதை பொருட்படுத்தி முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாதது தான், இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு காரணமாகும்.

செம்பரம்பாக்கம் ஏரியை காலம் தாழ்த்தி திறந்துவிட்டதே மிகப்பெரிய பாதிப்புக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் சட்டப் பேரவை உறுப்பினர்கள், பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என யாருடைய யோசனைகளையும், அரசு தரப்பில் இதுவரை கேட்கப்பட்டதில்லை.

இந்த மழை வெள்ளத்தால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான். ஆனால், குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம், 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை இவற்றை அறிவித்தால் மட்டும் போதுமா? மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் இழந்துள்ள உடை, உணவுப்பொருட்கள், கிரைண்டர், மிக்ஸி, பேன், டிவி, கேஸ் ஸ்டவ், கட்டில், மெத்தை என அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தமிழக அரசே இழப்பீடாக வழங்க வேண்டும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT