வேலூர் மாநகர அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தனது ஆதரவாளர்களுடன் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று (ஜூன் 09) புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
"அதிமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் கரோனா ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கும் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறோம்.
இந்நிலையில், அதிமுக சார்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களைத் தடுக்கும் வகையில் திமுகவினர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், அதிமுகவினர் நிவாரண உதவிகளை வழங்கக் கூடாது என, அதிகாரிகள் மூலம் மிரட்டல் விடுக்கின்றனர். எங்கள் மூலம் நிவாரண உதவிகளைப் பெற்ற தூய்மைப் பணியாளர்களும் மிரட்டப்படுகின்றனர்.
இதைக் கண்டித்த அதிமுக இளைஞரணி மற்றும் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது, காவல் நிலையங்களில் திமுகவினர் பொய்யான புகார் அளித்து அதிமுக நிர்வாகிகளை மிரட்டி வருகின்றனர். எனவே, மக்கள் நலப் பணியில் ஈடுபட்டு வரும் அதிமுக நிர்வாகிகளுக்கு உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும்".
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அதிமுக மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கூறுகையில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வேலூர் தொகுதி மக்களுக்கு உதவி செய்ய திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு விருப்பமில்லை. அதிமுக தாமாக முன்வந்து செய்யும் உதவியை அவர் தடுக்கப் பார்க்கிறார்.
வேலூர் தொகுதியில் கரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த தூய்மைப் பணியாளர்கள், தொழிலாளர்கள், வேலைவாய்ப்பை இழந்தவர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என, ஏராளமானோருக்கு தினமும் உதவி செய்து வருகிறோம். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத திமுக எம்எல்ஏ கார்த்திகேயன், தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது" என்றார்.