தமிழக சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் 21 அன்று தொடங்குகிறது. முதல் நாள் ஆளுநர் உரையாற்றுகிறார் என சட்டப்பேரவைச் செயலர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6 அன்று ஒரே கட்டமாக நடந்தது. மே 2ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை மே 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் பொறுப்பேற்றது.
16-வது சட்டப்பேரவையின் முதல்வராக ஸ்டாலினும், அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். சட்டப்பேரவை முன்னவராக அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு கொறடாவாக கோவி.செழியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். முதல் கையெழுத்தாக ரூ.4000 நிவாரணம் உள்ளிட்ட 5 கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் மே 11ஆம் தேதி காலை தொடங்கியது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை தற்காலிகத் தலைவர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அடுத்து நடந்த கூட்டத்தில் சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டார். துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வானார்.
16-வது சட்டப்பேரவையின் முறைப்படியான பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் இன்று வெளியிட்டார். ஜூன் 21 அன்று காலை கலைவாணர் அரங்கில் மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கில் நடக்கிறது. முதல் நாள் ஆளுநர் உரை நிகழ்த்துகிறார் என அறிவித்துள்ளார்.
முதல் நாள் ஆளுநர் உரையுடன் அவை தொடங்கும். ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை திட்டங்களைக் கொண்டதாக இருக்கும். ஆளுநர் உரைக்குப் பின் அவை ஒத்திவைக்கப்படும். பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் கூடி, அடுத்து எத்தனை நாட்கள் சபை நடக்கும் என்பதை முடிவெடுப்பார்கள்.
கரோனா தொற்றுக் காலம் என்பதால் உறுப்பினர்கள், அலுவலர்கள், செய்தியாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடக்கும். அதில் தொற்று இல்லாதவர்களே அனுமதிக்கப்படுவர்.
சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ஆலோசித்தார். இச்சந்திப்பின் போது ஆளுநர், கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதல்வரிடம் கேட்டறிந்தார். அப்போது நீர்வளத்துறை அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்