மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மாநகராட்சியின் 66வது புதிய ஆணையாளராக டாக்டர் கே.பி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு மதுரை மாநகராட்சி ஆணையாளராக இருந்த அனீஸ் சேகர் திடீரென்று இடமாற்றம்பட்டு அவருக்கு பதிலாக விசாகன் நியமிக்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக மாநகராட்சி ஆணையராக செயல்பட்டு வந்தார்.
இவரது பணிக்காலத்தில் ஸ்மார்ட்சிட்டி, பெரியார் கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், தமுக்கம் மைதானத்தில் கட்டப்படும் பல்நோக்கு வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த ஆண்டு முதல் அலை கரோனா மதுரையில் வேகமாக பரவியபோது மாநகராட்சி 100 வார்டுகளில் காய்ச்சல் முகாம், வீடு, வீடாக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் விநியோகம் செய்தது, கபசுரகுடிநீர் தயார் செய்து மாநகராட்சி சார்பில் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கியது உள்ளிட்ட இவரது சிறப்பான பணிகளால் மாநகராட்சியில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.
யாரையும் பகைத்துக் கொள்ளாமல் ஆளும்கட்சி, எதிர்கட்சி மக்கள் பிரதிநிதிகளுடன் இணக்கமான முறையில் இவர் செயல்பட்டு வந்தார். ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் அவரவர் போக்கில் சென்று வேலைகளை வாங்கினார்.
கடந்த ஒன்றரை ஆண்டாக கரோனா நெருக்கடியிலும் வரிசூல் 80 சதவீதம் வசூல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து மாநகராட்சி நிதி நெருக்கடியை சமாளித்தார்.
திமுக ஆட்சியில் தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருவதால் அந்த அடிப்படையில் இன்று மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த விசாகனும் மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு இன்னும் புதிய பணியிடம் ஒதுக்கப்படவில்லை. ஒரிரு நாளில் புது பணியிடம் ஒதுக்கப்படும் எனக்கூறப்படுகிறது.
விசாகனுக்கு பதிலாக மதுரை மாநகராட்சியின் 66வது புதிய ஆணையராக தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி கழக நிர்வாக இயக்குரனாக இருந்த டாக்டர் கே.பி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஓரிரு நாளில் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.
இவர் மருத்துவம் படித்தவர். தற்போது ஆட்சியராக இருக்கும் அனீஸ்சேகரும் மருத்துவர் என்பதால் தற்போது உள்ள கரோனா நெருக்கடியை இவரும் இணைந்து சிறப்பாக கையாளுவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.