தமிழகம்

புதுச்சேரியில் அனைத்துக் கோயில்களின் வசமுள்ள சொத்துகளின் பட்டியல்களை ஆவணப்படுத்த வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரியிலுள்ள இந்துக் கோயில் சொத்துகளைப் பாதுகாக்க குத்தகை தொகை, வாடகையைச் செலுத்தாதவர் பட்டியலை வெளியிட அரசுக்கு பாஜக வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் கோயில்கள் தொடர்பாக புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் இன்று வெளியிட்ட அறிக்கை:

"இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் மற்றும் சொத்துகளில் வாடகை மற்றும் குத்தகைத் தொகை வசூலிப்பதில் உள்ள தடைகளை, சுணக்கங்களை எல்லாம் நீக்கி உடனடியாக முழுத் தொகையை வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அளித்த சிறப்பான தீர்ப்பு திருக்கோயில்களின் வருவாயை அதிகரித்து சொத்துகளைப் பாதுகாக்க உதவி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பு அனைத்து இந்துக் கோயில்களுக்கும் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளவும், குத்தகைத் தொகை, வாடகை பாக்கித் தொகை ஆகியவற்றை வசூல் செய்யவும் வழிவகை செய்கிறது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புதுச்சேரியிலுள்ள இந்து சமய அறநிலையத்துறையானது, அனைத்துக் கோயில்களின் வசமுள்ள சொத்துகளின் பட்டியல்களை ஆவணப்படுத்த வேண்டும். சொத்துகள், குத்தகைதாரர் வசம் இல்லாமல், பலர் கை மாறி, குறைந்த வாடகையில் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

அதில் முறையாக வாடகை மற்றும் குத்தகைத் தொகையைச் செலுத்தாமல் உள்ளவர்களின் பட்டியலை வெளிப்படையாக வெளியிட வேண்டும். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி இடத்தைக் காலி செய்து நிலுவைத் தொகையை வாடகை பாக்கியை வட்டியுடன், வசூல் செய்ய வேண்டும்.

தற்போது வாடகையில் உள்ளவர்களுக்கும் நிலத்தின் தற்போதைய மதிப்பிற்கு ஏற்ப புதிய வாடகை புதுப்பித்து உயர்த்தித் தர அறிவுறுத்தப் படவேண்டும். இப்படி இந்துக் கோயில்களின் வருவாயைப் பெருக்கினால் அதன்மூலம் பள்ளிக் கூடங்கள். தொழில் கல்வி நிலையங்கள், திருமணக் கூடங்கள், பெண்களுக்கான பயிற்சிக் கூடங்கள், பாடசாலைகள், ஆன்மிக வகுப்புகள், மருத்துவமனைகள் என்று பல பொது சேவைத் திட்டங்களை இந்த வருவாய் மூலம் செயல்படுத்த முடியும்".

இவ்வாறு சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT