தமிழகம்

குமரி சிற்றாறு அணையில் அமைகிறது நீர்விளையாட்டுடன் கூடிய படகுத்தளம்: ஆலோசனை கூட்டத்தில் முடிவு

எல்.மோகன்

குமரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சிற்றாறு அணையில் படகுத்தளத்துடன் நீர்விளையாட்டுகள் அமைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

அப்போது ஏற்கெனவே கடந்த 4ம் தேதி குமரி வந்திருந்த சுற்றுலா கலைப்பண்பாடு, மற்றும் இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் சுற்றுலா பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தது நினைவு கூரப்பட்டது.

அவர் கன்னியாகுமரி பூம்புகார் படகு தளம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, திரிவேணி சங்கமம், சன்செட் பாயின்ட், முட்டம் கடற்கரை, மாத்தூர் தொட்டிப்பாலம், திற்பரப்பு அருவி, சிற்றாறு அணை பகுதிகளை பார்வையிட்டதுடன் அவற்றை மேம்படுத்துவது குறித்து சுற்றுலா, மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதனடிப்படையில் குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முட்டம் கடற்கரையில் உள்ள புதர்களையும், கழிவு பொருட்களையும் அகற்றி புல் செடிகள் அமைத்திடவும், சாலைகளின் அருகாமையில் வாகன நிறுத்தம் அமைத்து சுற்றுலா தலத்திற்கு வரும் பயணிகளுக்கு வசதியாக கழிப்பறைகள் ஏற்படுத்திடவும் முடிவு செய்யப்பட்டது.

இதைப்போல் முட்டம் கலங்கரை விளக்கத்தின் விளக்குகளில் பழுதுகள் நீக்கி பராமரித்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு செல்ல பெரிய அளவிலான நவீன படகுகளை பயன்படுத்துவதாலும், அதிக படகுகளை நிறுத்துவதற்கு படகு தளத்தினை விரிவுபடுத்திடவும், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு இடையே பாலங்கள் அமைப்பதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்திற்கு செல்லும் நடைபாதைகளில் பசுமை செடிகள் அமைத்தல், படிக்கட்டுகளில் வண்ணங்கள் பூசுதல், பூங்காக்கள், புராதான சிலைகள் அமைத்தல், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், பூம்புகார் நிலையத்தில் கைவினை பொருட்கள், அலங்கார மீன்கள், பழங்கால பொருட்களை காட்சிபடுத்திட நடவடிக்கை எடுப்பது, சுற்றுலா பயணிகள் அனைவரும் சூரிய உதயம், மற்றும் அஸ்தமனத்தை காண்பதற்கு வசதியாக இருக்கைகள் அமைத்திடவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மாத்தூர் தொட்டிப்பாலத்தின் உறுதியினை ஆய்வு செய்து அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பழுதினை நீக்கி பாலத்தை சீரமைத்திடவும், திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு படிகட்டு இருக்கைகள் அமைப்பதுடன் பாதுகாப்பு அறைகளை மேம்படுத்திடவும் சுற்றுலா, மற்றும் பேரூராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. சிற்றாறு அணை பகுதியை சிறந்த சிற்றுலா மையமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டது.

அப்போது, சிற்றாறு அணை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தி அதில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் வாயிலாக சுற்றுலா விடுதிகள் அமைத்திடவும், சிற்றாறு அணையில் படகுத்தளம் அமைத்திடவும், அங்கு தனியார் பங்களிப்புடன் நீர்விளையாட்டுகள், ரிசார்ட்டுகள் அமைத்திடவும் முடிவு செய்யப்பட்டு, அதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சீத்தாராமன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT