தமிழகம்

கர்ப்பிணிகள், குழந்தைகளின் துயரம்; ஓசூர் நூரோந்து சாமிமலைக்குத் தார்ச் சாலை அமைக்க ஆய்வு- மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி

ஜோதி ரவிசுகுமார்

ஓசூர், உரிகம் வனச்சரகத்தில் கோட்டையூர் ஊராட்சிக்குட்பட்ட பிரசித்தி பெற்ற நூரோந்து சாமிமலைக்கு தார்ச் சாலை அமைக்க முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து, மாவட்ட வன அலுவலர் பிரபு மற்றும் தளி ஒன்றியக் குழுத் தலைவர் சீனிவாசரெட்டி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஓசூர் வனக்கோட்டம் உரிகம் வனச்சரகத்துக்குட்பட்ட தக்கட்டி காப்புக்காடு பகுதியில் உள்ள கோட்டையூர் ஊராட்சியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த நூரோந்து சாமிமலையில் சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த மலையில் 10-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஜீவ சமாதி அடைந்துள்ளதாகவும், இங்கு எண்ணெய்க்கு பதிலாக இளநீர் ஊற்றி தீபம் ஏற்றி, சிவபெருமானுக்கு தீபாராதனை செய்து வழிபடும் அதிசயம் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலாக விளங்கி வருவதாக இப்பகுதி மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.

இந்தக் கோயிலில் வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் மகா சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களிலும் சிவபெருமானுக்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்தப் பூஜைகளில் கலந்து கொள்ள உரிகம், மஞ்சுகொண்டப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார மலை கிராமங்களில் இருந்தும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மலை மற்றும் வனம் சார்ந்த இந்த பகுதியில் தார்ச் சாலை இன்றி குண்டும் குழியுமான காட்டுப்பாதையில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் மிகவும் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர்.

அதேபோல இந்த நூரோந்து சாமிமலையைச் சுற்றிலும் உள்ள ஜோடுகரை, சிவபுரம், போடூர், அத்திநத்தம் ஆகிய மலை கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாட வேலைக்குச் செல்வதற்கும், மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கும், நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்கும் சாலை வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக இப்பகுதியில் உள்ள கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு மரக்கம்பம் மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தித் தூக்கிச் செல்லும் அவல நிலை நிலவுகிறது. இதனால் அத்திநத்தம் முதல் நூரோந்து சாமிமலை வரை உள்ள சுமார் 3.50 கி.மீ. தொலைவுக்கு தார்ச் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று இப்பகுதி பக்தர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே தற்போது நூரோந்து சாமிமலைக்குச் செல்ல தார்ச் சாலை அமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்தி தளி ஒன்றியக் குழுத் தலைவர் மூலமாகத் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல்வர் உத்தரவின்படி தளி ஒன்றியக் குழுத் தலைவர் சீனிவாசரெட்டி, மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையிலான குழுவினர் நூரோந்து சாமிமலைக்குத் தார்ச் சாலை அமைக்கும் பணிக்காக ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டனர்.

இதில் அஞ்செட்டி வனச்சரகர் சீதாராமன், உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம், மாவட்டக் குழு உறுப்பினர் மம்தா மஞ்சுநாத், கோட்டையூர் ஊராட்சித் தலைவர் சென்னபசம்மா கிருஷ்ணமூர்த்தி, கோயில் அர்ச்சகர்கள் வீரபத்ரய்யா, நாகராஜ், ஒன்றியக் குழு மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் பிரபு கூறும்போது, ''நூரோந்து சாமிமலை பகுதியில் தார்ச் சாலை அமைப்பதற்காகத் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள், பள்ளி, பணி மற்றும் மருத்துவமனைக்குச் சென்று வர சாலை வசதி இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அவசரக் காலத்தில் கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே இங்குள்ள மலைவாழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் தார்ச் சாலை வசதிக்கு அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT