மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சென்னையில்மேலும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அயனாவரத்தில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் திருவொற்றியூரை சேர்ந்த ஆனந்தன் (51) என்பவர் , 11, 12-ம்வகுப்புகளுக்கு வணிகவியல் பாடம் நடத்தி வந்தார். கடந்த 2014 முதல் 2016 வரை ஆனந்தனிடம் படித்த மாணவிகள் சிலர், பள்ளியில் படிக்கும்போது தங்களுக்கு ஆசிரியர் ஆனந்தன் பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர்.
இந்த புகார் தொடர்பாக பள்ளிநிர்வாகம் விசாரணை நடத்தியது. ஆனந்தன் மீதான புகார்உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆனந்தனைபணி இடைநீக்கம் செய்து பள்ளிநிர்வாகம் உத்தரவிட்டது.
இதுகுறித்து கல்வித் துறையும், குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு ஆணையமும் தனித்தனியாக விசாரித்து அறிக்கைகளை தமிழக அரசுக்கு அனுப்பின.
இந்த அறிக்கைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து ஆனந்தன் மீது,குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரை நேற்றுகைது செய்தனர். இவர் ஏற்கெனவே சேத்துப்பட்டு பள்ளியில் பணியாற்றியபோதும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுகுறித்தும் போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னையில் ஏற்கெனவே தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மேலும் ஒரு ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.