புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் வர தாமதம் ஆனதால், விழா மேடையில் பேசிவிட்டு புறப்பட தயாராகும் அமைச்சர் எஸ்.ரகுபதி. 
தமிழகம்

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வர தாமதம் பாதியில் வெளியேறிய சட்ட அமைச்சர்: புதுக்கோட்டை அரசு விழாவில் அலுவலர்கள் அதிர்ச்சி

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை அருகே நேற்று நடைபெற்ற அரசு விழாவுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வர தாமதம் ஏற்பட்டதால், அங்கு நீண்ட நேரம் காத்துஇருந்த சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திடீரென வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் மறைந்த சமூக ஆர்வலர் அருள்மொழியின் பிறந்தநாளை யொட்டி நேற்று ரூ.1.5 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர், மழையூரில் நடைபெற்ற நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழாவுக்கு அமைச்சர் ரகுபதியும், திருக்கட்டளை பகுதியில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சிக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனும் சென்றிருந்தனர்.

அதையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் 60 செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் இரு அமைச்சர்களும் கலந்து கொள்வதாக இருந்தது. மழையூர் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அமைச்சர் ரகுபதி மருத்துவக்கல்லூரிக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அங்கு அவர் சுமார் அரை மணி நேரமாக காத்திருந்தும் அமைச்சர் மெய்யநாதன் வரவில்லை.

ஸ்டாலின்தான் பதவி வழங்கினார்

இதனால் பொறுமை இழந்த அமைச்சர் ரகுபதி, விழா மேடை ஏறி பேசத் தொடங்கினார். அப்போது, “புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள செவிலியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் யாருக்கும் தொந்தரவு வந்துவிடக்கூடாது, மக்கள் நலன்தான் முக்கியம் என்று நினைப்பவன் நான்.

திமுக தலைவர் ஸ்டாலின்தான் எனக்கு தலைவர். அவர்தான் எனக்கு அமைச்சர் பதவி வழங்கிஉள்ளார். இந்த பதவி மூலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு நல்ல பணிகளை செய்வேன். அலுவலர்களுக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பை அளிப்பேன். பணிநியமன ஆணைகளை சுற்றுச்சூழல் அமைச்சர் வந்து வழங்குவார்” என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

அதன் பின்பு அங்கு வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது, வை.முத்துராஜா எம்எல்ஏ, மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இரு அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஒரு வாரத்துக்கும் மேலாக காத்திருந்து நடத்தப்பட்ட நிலையில், ஒரு அமைச்சரின் தாமதத்தால் மற்றொரு அமைச்சர் வெளியேறிய நிகழ்வு அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT