காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர் மற்றும் நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியது:
"குமரிக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மேற்கு நோக்கி நகர்ந்து மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை அதே பகுதியில் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக திங்கள்கிழமை காலை வரையான 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்மாவட்டங்களில் அனேக இடங்களிலும் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யலாம்.
டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்யும்" என்றார் ரமணன்.
செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை அல்லது மிக கனமழையும், 10,11 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லையி்ல் கனமழை பெய்யலாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை இல்லை. கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளிலும், தென் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை பெய்தது. மழை இல்லாததால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் தொய்வின்றி நடக்கின்றன.