தமிழகம்

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் நியமனத்தில் சர்ச்சை- நீதிபதியை நியமிக்க உயர் நீதிமன்றத்தில் தொழிற்துறையினர் முறையீடு

ஹெச்.ஷேக் மைதீன்

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நியமிக்கப்பட்டுள்ள மின்சார ஒழுங்கு முறை ஆணைய புதிய தலைவரின் பதவிக்கு, சிக்கல் எழுந்துள்ளது. மின் துறையை முன்னேற்றும் வகையில் நீதிபதியை நியமிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் தொழிற்துறையினர் முறையிட்டுள்ளனர்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக இருந்த கபிலன், கடந்த 2012 ஜனவரியில் ஓய்வு பெற்றார். புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க, ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் ஒரு கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. ஆனால், ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் பதவி தொடர்பாக தொழிற்துறையினர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

‘ஒழுங்குமுறை ஆணையம் நீதிமன்ற அந்தஸ்தில் செயல்படுவதாலும், பாரபட்சமற்ற முறையில் மின் துறைக்கும் அரசுக்கும் தொழிற்துறையினருக்கும் உத்தரவுகளை வழங்க வேண்டும். அதனால், நீதித்துறையைச் சேர்ந்தவர் தான், ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும்’ என்று மனுவில் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் புதிய கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. கபிலன் ஓய்வு பெற்று இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஒழுங்குமுறை ஆணைய புதிய தலைவராக தமிழக மின் தொடரமைப்புக் கழக இயக்குநர் அக்‌ஷய் குமாரை அரசு நியமித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஒழுங்குமுறை ஆணைய புதிய தலைவர் எஸ்.அக்‌ஷய்குமார், தலைமைச் செயலகத்தில் மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் திங்கள்கிழமை பதவியேற்றார். அவர் பதவியேற்று ஒரு நாளே ஆன நிலையில், ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் நியமனத்துக்கு தடை விதிக்குமாறு, தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் தருவதாக, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் கூறியதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

இந்த வழக்கால் புதிய தலைவரான அக்‌ஷய்குமார், ஒழுங்குமுறை ஆணையப் பணிகளை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வழக்கு முடிந்து தீர்ப்பு வந்தால் மட்டுமே, ஒழுங்குமுறை ஆணையத் தலைவர், மின் துறை தொடர்பான மனுக்களை விசாரிக்கவும் முடிவெடுக்கவும் முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிற்துறையினர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மின் துறை நிதிப்பிரிவின் ஓய்வு பெற்ற இயக்குநர் ராஜகோபால், சமீபத்தில்தான் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் புதிய உறுப்பினராகியுள்ளார். ஏற்கெனவே இருக்கும் உறுப்பினர் நாகல்சாமியும் மின் துறையைச் சேர்ந்தவர்தான். தற்போது மின் தொடரமைப்புக் கழக ஓய்வு பெற்ற இயக்குநர் அக்‌ஷய்குமாரை, ஆணையத்தின் புதிய தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது. ஒழுங்குமுறை ஆணைய தலைமையிடத்தில் மின் துறையினரே இருப்பதால், மின் துறை மற்றும் தமிழக அரசின் அரசியல் சார்ந்த, சாராத முடிவுகளை எதிர்த்து வழக்குத்

தொடர்ந்தால், அதில் உரிய நீதி கிடைக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. மின் வாரிய முடிவுகளை எதிர்த்து மனு செய்தால், ஏற்கெனவே மின் வாரியத்தில் அந்த முடிவுகளை எடுத்த அதிகாரிகளே அதை விசாரிக்கும் நிலை உள்ளது. எனவே, பாரபட்சமற்ற விசாரணையும் உத்தரவும் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

ஒழுங்குமுறை ஆணையம், நீதிமன் றத்துக்கு இணையான, முக்கியமான கொள்கை முடிவுகளை எடுக்கும் அமைப்

பாக இருப்பதால், அங்கு நீதித்துறை யினர்தான் தலைவராக இருக்க வேண்டும். மின் வாரியம், அரசியல் சார்ந்த அரசின் முடிவுகளை பின்பற்று வதால் இலவச மின்சாரம், மின் கட்டண சலுகை, குறைந்த மானியத் தொகை, அரசியல் ரீதியான நியமனங்கள் போன்ற பல காரணங்களால் ரூ.70 ஆயிரம் கோடி வரை இழப்புடன் செயல்படுகிறது. இந்த நிலையை மாற்ற அரசியல் மற்றும் அரசுத் துறை சாராத நீதித்துறை தலைவரை ஆணைய தலைவராக நியமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT