சிதம்பரம் அருகே கூடுவெளியில் சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்து பார்வையிட்டார். 
தமிழகம்

சிதம்பரம் அருகே கூடுவெளியில் கரோனா தொற்றாளர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையம்: அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

சிதம்பரம் அருகே காட்டுமன்னார் கோவில் வட்டத்துக்கு உட்பட்ட கூடுவெளியில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளித்திடும் வகையில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர்கி.பாலசுப்ரமணியம் தலைமைதாங்கினார். காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன் முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது:

கரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் பாதிப்பு குறைந்து வருகிறது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26.05.2021 அன்று கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவத்துடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதைத்தொடர்ந்து கூடுவெளியில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் மேலும் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்தா சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில்கரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு 7 வகையான சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன.

தொற்று பாதித்தவர்களுக்கு காலை, மாலை இருவேளையும் கஷாயம் மற்றும் மூலிகை தேநீர் வழங்குவதுடன் மூலிகை சிற்றுண்டியும், மூலிகைகள் சேர்ந்த மதிய உணவு மற்றும் சீரக கஞ்சி, சுக்கு காபி, சிறுதானிய சுண்டல் ஆகியவை வழங்கப்படும்.

கரோனா சிகிச்சை மேற்கொள் பவர்களுக்கு மூச்சு பயிற்சி, யோகா பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள்மனதளவில் ஆரோக்கியமாக நோயினை எதிர்க்க சித்த மருத்துவரின் மனநல ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

கரோனா பாதித்தவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதினால் எவ்விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. இந்த சித்த மருத்துவ மையம் நல்ல காற்றோட்ட சூழலில் அமைந்துள்ளதால் தொற்று பாதித்தவர்கள் இம்மையத்தில் சிகிச்சை மேற்கொண்டு நலமுடன் செல்லலாம் என்றார்.

தொடர்ந்து கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் துணிசிரமேடு ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் நடைபெறும் வாய்க்கால் சீரமைப்பு பணியினை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிதம்பரம் சார்-ஆட்சியர் மதுபாலன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மருத்துவர் ரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மருத்துவர் செந்தில்குமார், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் ராஜகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT