கரோனா பரவும் காலத்தில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் குப்பையோடு கலந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.
மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம் வகுத்துள்ளது. அதன்படி கையுறைகள், பயன்படுத்திய ஊசிகள், காலாவதியான மருந்து, மாத்திரைகள், அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்திய பொருட்கள், குளுக் கோஸ், மருந்து பாட்டில்கள் போன்ற மருத்துவக் கழிவுகளை அதற்குரிய பெட்டிகளில் கொட்டி வைத்து பாதுகாப்பாக அகற்ற வேண்டும். மேலும் மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்கு தமிழகம் முழுவதும் 11 பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. முறையாக மருத்துவக் கழிவுகள் அகற்றப்படுகிறதா? என்பதை சுகாதாரத் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
சிவகங்கை அரசு மருத்து வமனையின் மருத்துவக் கழிவுகள் தஞ்சை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகின்றன. வார்டுகளில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரிக்காமல் குப்பை யோடு கலந்து கொட்டுகின்றனர். குப்பையோடு கலந்த மருத்துவக் கழிவுகள் சிவகங்கை நகராட்சி தெற்கு மயானத்தில் உள்ள கிடங்கில் கொட்டப்பட்டு இரவில் எரிக்கப்படுகின்றன. இத்துடன் மருத்துவக் கழிவுகளும் எரிக்கப் படுகின்றன.
இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதோடு, நோய் பரவும் அபாயமும் உள்ளது. குப்பை களை வாகனங்களில் ஏற்றும் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களுக்கு கையுறைகள் வழங்காததால் வெறும் கையோடு மருத்துவக் கழிவுகளை அள்ளு கின்றனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘மருத்துவக் கழிவுகள் 3 நாட்களுக்கு ஒருமுறை அகற்றப்படுகின்றன. சாதாரண குப்பையோடு, மருத்துவக் கழிவுகள் கலந்து கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.