‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் 7 மாதங்களாக மூடிக்கிடந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்று திறக்கப்பட்டது.
விராலிமலை ஊராட்சி ஒன்றியம் மாத்தூரில் மாநில நிதிக்குழு மானியத் திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் 7 மாதங்களுக்கு முன்பு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது, இந்தக் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் இந்தக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ‘இந்து தமிழ்’ நாளிதழில் ஜூன் 6-ம்தேதி படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் உத்தரவின் பேரில், மூடிக்கிடந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊராட்சித் தலைவர் அருணாசலம், ஊராட்சி செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலான பணியாளர்கள் சுத்தம் செய்து, நேற்று திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.
இதையடுத்து, ஒரு குடத்துக்கு ரூ.5வீதம் செலுத்தி மகிழ்ச்சியோடு குடிநீரை பிடித்துச் சென்ற பொதுமக்கள், குடிநீர் நிலையத்தை முறையாக பராமரித்து தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.