காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியைப் பார்வையிட்ட காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா. 
தமிழகம்

மீனவ கிராமங்களில் கரோனா தடுப்பூசி முகாம்: காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

வீ.தமிழன்பன்

காரைக்கால் மாவட்டத்தில் கடலோர மீனவ கிராமங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று (ஜூன் 8) நடத்தப்பட்டது.

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் காரைக்கால் மாவட்டத்தின் கிராமப் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, பட்டினச்சேரி, கருக்களாச்சேரி, வடக்கு வாஞ்சூர், கோட்டுச்சேரிமேடு, காசாகுடிமேடு, அக்கம்பேட்டை, காளிக்குப்பம், மண்டபத்தூர் ஆகிய 10 மீனவ கிராமங்களில், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.

காரைக்கால்மேடு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா கலந்துகொண்டு தடுப்பூசி முகாமைத் தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நலவழித்துறை, மீன்வளத்துறை, வருவாய்த் துறை, அங்கன்வாடி ஊழியர்கள், சுய உதவிக் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் உதவியுடன் இந்தத் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. வீடு வீடாகச் சென்று 45 வயதுக்கு மேற்பட்டோரைச் சந்தித்துப் பேசி, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்களிடம் இதற்கு நல்ல ஒத்துழைப்பு இருப்பதைக் காண முடிகிறது. இதற்கான மீனவப் பஞ்சாயத்தார்களுக்கும், தொடர்புடைய அரசுத் துறையினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஆட்சியர் அர்ஜுன் சர்மா தெரிவித்தார்.

மற்ற கிராமங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் மையங்களுக்கும் சென்று மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

மாவட்டத் துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் கே.மோகன்ராஜ், மீன்வளத்துறை துணை இயக்குநர் கவியரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT