கோவை மாவட்ட அதிமுக சார்பில் அரசு மருத்துவமனையில் பயன்படுத்தும் வகையில் 25 ஆக்சிஜன் செறிவூட்டுகள் கருவிகள் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜனிடம் இன்று (ஜூன் 8) வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
''தமிழக அரசின் சார்பில் தடுப்பூசி போடும் மையங்களிலும், ரேஷன் கடைகளிலும் டோக்கன் வழங்குவதில் திமுகவினர் குறுக்கீடு செய்வதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். காவல்துறையினர் இதைக் கண்டுகொள்வதில்லை. எனவே, திமுகவினர் தலையீட்டை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கக்கூடாது.
கரோனாவால் இறந்தவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் இழப்பீடு பெறுபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, பரிசோதனை முடிவில் 'பாசிட்டிவ்' வந்தவர்களுக்கு 'நெகட்டிவ்' எனச் சான்று வழங்கி மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே, அதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் கழிப்பறைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கோவை மாவட்டத்தில் படுக்கை வசதி விவரங்களைத் தெரிந்துகொள்ளவதில் குளறுபடி உள்ளது.
அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டால், "படுக்கை வசதி இல்லை. கிடைத்ததும் தகவல் தருகிறோம்" என்று கூறித் தொடர்பைத் துண்டித்து விடுகின்றனர். இதனால், நோயாளிகள் மிகுந்த அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த நிலையை மாற்றி, படுக்கை வசதி குறித்த உண்மை நிலையைக் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் வெளிப்படையாகத் தெரிவிக் வேண்டும்.
கோவையில் கருப்புப் பூஞ்சை சிகிச்சைக்கான அனைத்து மருத்துவ வசதிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் ஏற்படுத்த வேண்டும். நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து, தடுத்து நிறுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், அம்மன் கே.அர்ச்சுணன், அமுல்கந்தசாமி, வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல, மேற்கு மண்டலக் காவல்துறை தலைவர் ஆர்.சுதாகர், கோவை மாநகரக் காவல் ஆணையர் தீபக் தாமோர் ஆகியோரிடமும் எம்எல்ஏக்கள் மனு அளித்தனர்.