தமிழகம்

44 நாட்களுக்குப் பிறகு புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு: செஃல்பி எடுத்த மதுப்பிரியர்கள்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் 44 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் புதுச்சேரியில் திறக்கப்பட்டன. அதையடுத்து கரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே வரிசையில் நின்று பலர் மது வாங்கினர். அதே நேரத்தில் நூலகம், பூங்கா திறக்கத் தடை தொடர்கிறது.

புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஏப்.24-ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசியக் கடைகளைத் தவிர்த்து வணிக நிறுவனங்கள், மதுக்கடைகள் உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் பல முக்கியத் தளர்வுகள் நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்டன.

புதுச்சேரியில் இன்று காலை 5 மணி முதல் காலை 9 வரை கடற்கரை சாலையில் நடைப்பயிற்சி செல்ல அனுமதி தரப்பட்டது. அதையடுத்துப் பலரும் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.

அனைத்துக் கடைகளும் காலை 6 முதல் மாலை 5 வரை திறந்து இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. குறிப்பாக அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டன.

அதேபோல் மதுபானக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கலாம். பார்களில் அமர்ந்து மது அருந்தத் தடை நீடிக்கிறது. அதேபோல் சாராயம் மற்றும் கள் கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். கடையில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் தலைமையில் அதிகாரிகள் மதுக்கடைகளுக்கு வைக்கப்பட்டிருந்த சீல்களை அகற்றினர்.

மதுபானக் கடைகளுக்கு தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டு, மது வாங்குவோர் வரிசையில் வந்தனர். அவர்கள் சானிடைசர் பயன்பாடு, முகக் கவசம் அணிய வேண்டும். அரசு உத்தரவுகளை மதுக்கடைகள் சரியாகக் கடைப்பிடிக்கின்றனவா என்பதைக் காவல்துறை, நகராட்சி, கலால்துறை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.

விதிமீறினால் மதுபானக் கடைகள் தகுதி நீக்கம் செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கடைகளைத் திறந்தாலும் நடவடிக்கை உறுதி என எச்சரிக்கப்பட்டுள்ளது.

44 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறந்ததால் மதுவாங்க ஏராளமானோர் வரிசையில் நின்று மதுவகைகளை வாங்கிப் பலவகைகளில் மகிழ்வை வெளிப்படுத்தினர். மதுப்பிரியர்கள் சிலர் மது பாட்டில்களுடன் செல்ஃபி எடுத்தனர். சிலர் மதுபாட்டில்களுடன் வெற்றிச் சின்னத்துடன் தம்ஸ் அப் காண்பித்தனர். சிலர் மதுபாட்டில்களுக்கு முத்தமும் தந்தனர். அதே சூழலில் பூங்கா, நூலகங்கள் ஏதும் திறக்க அனுமதி தரப்படவில்லை.

கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் தடுப்பூசி போடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT