தமிழகம்

மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட கரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க ரூ.160 கோடி ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு தொடர் பணியில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஈடுபட்டுள்ள மருத்துவர், பிற பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க ரூ.160 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொடர்பான பணிகளில் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் காலமுறை ஊதியத்துடன் கூடிய அரசு பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி, அலோபதி மற்றும் இந்திய முறை மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம், பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.15 ஆயிரம், செவிலியருக்கு ரூ.20 ஆயிரம், கிராம மற்றும் பகுதி சுகாதார செவிலியர், 108 அவசர ஊர்தி, 104 அமரர் ஊர்தி பணியாளர்கள், சுகாதாரம் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் அவர்களுக்கு இணையான பணியாளர்கள், மருத்துவம் சாரா பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம், புற ஆதாரமுறையில் பணியமர்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், ஆய்வுக்கூடங்கள், அவசர மருத்துவ ஊர்திகள், கரோனா கவனிப்பு மையம், காய்ச்சல் முகாம்கள், பரிசோதனை மாதிரி சேகரிப்பு மையங்கள் உள்ளிட்ட மையங்களில் பணியாற்றுவோர், நேரடியாக தொற்றாளர்களுடன் தொடர் பணியில்ஈடுபட்டு வரும் தகுதி வாய்ந்தவர்களை இனம்கண்டு, நிதித் தொகுப்பு வழங்க அந்தந்த துறை இயக்குநர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்தநிதித் தொகுப்பு வழங்க ரூ.160 கோடிஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT